வாய்க்காலில் பாய்ந்த கார்.. 4 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிர் தப்பினர்!

இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாய்க்காலில் பாய்ந்த கார்.. 4 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிர் தப்பினர்!
வாய்க்காலில் பாய்ந்த கார்
Published on: 

புதுச்சேரி,

புதுச்சேரி அருகே எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார், சாலையோர வாய்க்காலில் பாய்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் பயணித்த 4 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

வைத்தீஸ்வரன் கோவில் பயணம்

சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சரண் (வயது 36), மனோஜ் (வயது 27) மற்றும் 4 வயது சிறுமி அகானா உள்ளிட்ட 5 பேர், கடந்த 25-ந்தேதி அன்று சுற்றுப்பயணமாக வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்றுள்ளனர். சாமி தரிசனம் முடித்துவிட்டு, மறுநாள் (திங்கட்கிழமை) அன்று அதிகாலை அவர்கள் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

கட்டுப்பாட்டை இழந்த கார்

அவர்களின் கார் காலை 6.45 மணி அளவில் புதுச்சேரி பாகூர் - கன்னியக்கோவில் சாலையில் ஆல்பா கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தது. வடகிழக்கு பருவமழை காரணமாக புதுச்சேரி பகுதியில் வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்த நிலையில், காரின் எதிரே மற்றொரு வாகனம் வந்துள்ளது. அதற்கு வழிவிடுவதற்காக ஓட்டுநர் காரை சாலையோரமாக ஒதுக்கியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த சித்தேரி வாய்க்காலுக்குள் பாய்ந்து கவிழ்ந்தது.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

காரின் பாதி அளவு தண்ணீரில் மூழ்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், காரில் இருந்த அனைவரும் உடனடியாக சாதுரியமாக செயல்பட்டு, சிறு காயங்களுடன் காரில் இருந்து பத்திரமாக வெளியேறினர்.

கிரேன் மூலம் மீட்பு

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாகூர் தீயணைப்பு துறையினர் மற்றும் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார், விபத்துக்குள்ளான காரை கிரேன் மூலமாக வாய்க்காலில் இருந்து மீட்டனர். இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பொதுமக்கள் கோரிக்கை

குறிப்பிட்ட இந்த சித்தேரி வாய்க்கால் பகுதியில் சாலைத் தடுப்புச் சுவர்கள் இல்லாததே தொடர் விபத்துகளுக்கு காரணம் என்றும், அசம்பாவிதங்களைத் தடுக்க அங்கு உடனடியாக பாதுகாப்புத் தடுப்புகள் அமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com