ஹார்முஸ் நீரிணையை கடந்து 20 ஆயிரம் டன் சமையல் எரிவாயுவுடன் குஜராத் வந்த சரக்கு கப்பல்

ஹார்முஸ் நீரிணையை இந்திய கப்பல்கள் கடக்க உதவுவோம் என ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி உறுதி அளித்தார்.
ஹார்முஸ் நீரிணையை கடந்து 20 ஆயிரம் டன் சமையல் எரிவாயுவுடன் குஜராத் வந்த சரக்கு கப்பல்
Published on

ஆமாதபாத்,

ஈரான்-அமெரிக்க, இஸ்ரேல் படைகளுக்கு இடையே கடந்த பிப்ரவரி மாதம் 28-ந் தேதி முதல் போர் நடந்து வந்தது. இதனிடையே மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக ஹார்முஸ் நீரிணையை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் அங்கு கப்பல் போக்குவரத்து முடங்கியது. இப்பகுதியில் வினியோக தடைகள் 75 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருவதால், இந்தியாவின் கச்சா எண்ணெய் கையிருப்புகள் கடந்த சில மாதங்களில் கணிசமாக குறைந்தன.

வரும் நாட்களில் புதிய சரக்குகள் வரவில்லையெனில், இந்தியாவின் வசம் இன்னும் வெறும் 18 நாட்களுக்கு மட்டுமேயான எரிபொருள் இருப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீரான கப்பல் வரத்து இருந்தால் மட்டுமே நெருக்கடியை சமாளிக்க முடியும் என்ற நிலை உள்ளது. இந்த மாத தொடக்கத் தில் இந்தியாவில் வணிக சிலிண்டர் விலை ரூ.993 அதிகரித்தது. இதற்கிடையில் சமீபத்தில் டெல்லியில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அராக்சி ஹார்முஸ் நீரிணையை இந்திய கப்பல்கள் கடக்க உதவுவோம் என உறுதி அளித்தார்.

இந்நிலையில் கடந்த 13-ந்தேதி சமையல் எரிவாயுவை ஏற்றிக் கொண்டு சிமி, என்.வி.சன்ஷைன் என்ற 2 இந்திய கப்பல்கள் மொத்தம் 66 ஆயிரத்து 392 டன் சமையல் எரிவாயுவுடன் இந்தியாவை நோக்கி கிளம்பின. இந்த 2 கப்பல்களும் ஹார்முஸ் நீரிணையை வெற்றிகரமாக கடந்து இந்தியாவை நோக்கி வந்தன.

மார்ஷல் தீவுகள் கொடியை கொண்ட 'சிமி' என்ற சமையல் எரிவாயு கப்பல் நேற்று குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள காண்ட்லா தீன்தயாள் துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பலில் 20 ஆயிரம் டன் சமையல் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு வந்துள்ளது. இந்த கப்பலில் 8 உக்ரேனியர்கள், 13 பிலிப்பைன்ஸ் நாட்டினர் உள்பட 21 பேர் கொண்ட குழுவினர் பயணித்தனர்.

46 ஆயிரம் டன் சமையல் எரிவாயுவை கொண்ட வியட்நாம் கொடியை கொண்ட மற்றொரு கப்பலான 'என்.வி.சன்ஷைன்' கப்பல் கர்நாடக மாநிலம் புது மங்களூரு துறைமுகத்துக்கு இன்று (திங்கட்கிழமை) வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 மாதங்களில் 15 கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை கடந்து இந்தியாவுக்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com