மதுபோதையில் நடுரோட்டில் சிறுநீர் கழித்த வாலிபர் மீது வழக்குப்பதிவு

மதுபோதையில் நடுரோட்டில் சிறுநீர் கழித்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புனே,
மராட்டிய மாநிலம் புனேயில் வாலிபர் ஒருவர் நடுரோட்டில் காரை நிறுத்தி சிறுநீர் கழிக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாக பரவியது. வீடியோவில், வாலிபர் ஒருவர் நடுரோட்டில் காரை நிறுத்தி சாலையோர தடுப்பு சுவரில் சிறுநீர் கழிக்கிறார்.
அதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி தட்டிக்கேட்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் காரில் ஏறி அமர்ந்து ஆடையை கழற்றி வாகன ஓட்டியை நோக்கி ஆபாச செய்கை காட்டி அங்கு இருந்து தப்பி செல்கிறார். காரில் மேலும் ஒரு வாலிபர் மதுபாட்டிலுடன் இருந்தார். இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவியது.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் நடுரோட்டில் மதுபோதையில் அநாகரிகமாக நடந்து கொண்ட வாலிபர் புனேயை சேர்ந்த ஓட்டல் அதிபர் மனோஜ் அகுஜாவின் மகன் கவுரவ் அகுஜா என்பது தெரியவந்தது.
அவர், நண்பருடன் நேற்று காலை 7.30 மணியளவில் காரில் புனே ஏரவாடா சாஸ்திரிநகர் சிக்னல் அருகே சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் கவுரவ் அகுஜா மற்றும் அவருடன் காரில் இருந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






