

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவி விலக வலியுறுத்தி, எதிர்க் கட்சி எம்.பி.க்கள் நேற்று முன்தினம் டெல்லியில் தேர்தல் கமிஷன் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியை போலீசார் தடுத்தபோது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் அருகில் உள்ள அகில இந்திய வானொலி நிலைய அலுவலகத்துக்குள் புகுந்தனர். அங்கு இரவு வரை தர்ணா போராட்டமும் நடத்தினர்.போராட்டம் இரவு 7.30 மணிக்கு பிறகும் தொடர்ந்ததால் போலீசார் உள்ளே நுழைந்து ராகுல்காந்தி, கே.சி.வேணுகோபால், சரண்ஜித் சிங் சன்னி, பவன் கெரா உள்ளிட்டவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி, கைது செய்து ஆயுதப்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.
நேற்றைய போராட்டத்தில் 50 எம்.பி.க்கள் உள்பட 250-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து உள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இரவு 10 மணி அளவில் விடுதலை செய்யப்பட்டனர்.அகில இந்திய வானொலி நிலைய வளாகத்துக்குள் நடந்த இந்த போராட்டம் தொடர்பாக ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் மீது நாடாளுமன்றம் தெரு போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இந்த வழக்கு பதிவு குறித்து ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "என் மீது 45 எப்.ஐ.ஆர்.கள்(முதல் தகவல்அறிக்கைகள்) உள்ளன. 100 எப்.ஐ.ஆர். பெறுவதே எனது இலக்கு. என் மீது 100 எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒவ்வொரு எப்.ஐ.ஆரும் எனக்கு ஒரு பதக்கம் போன்றது" என்று கூறினார்.