

புதுடெல்லி
டெல்லி ஜந்தர் மந்தர் தொடர்பான வழக்குகள் ஐகோர்ட்டில் இன்று விசாரணை செய்யப்படுகின்றன.
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் (எஸ்.ஐ.ஆர்.), ஒவ்வொரு மாநிலத்திலும் லட்சக்கணக்கான பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளன. ஒட்டுமொத்தத்தில், 13 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ள சூழலில், உரிய முறைகளின்படியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
எனினும், இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார், மற்ற இரு ஆணையாளர்களின் ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாமல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் தன்னிச்சையாக செயல்பட்டதாக புகார்கள் எழுந்தன. இந்த நீக்கத்திற்கு அவரது அரசு சார்பு நடவடிக்கைகளே காரணம் எனக்கூறி எதிர்க்கட்சியினர், அவரை பதவி விலக வலியுறுத்தி வருகிறார்கள். தவிர, பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் காந்தி ஜெயந்தி அன்று ஆம் ஆத்மி கட்சியும், இந்திய மாணவர் சங்கம், இந்திய தேசிய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் சங்கம் போன்ற மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதேபோன்று சமீபத்தில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இதே விவகாரம் தொடர்பாக, கடந்த 10 மற்றும் 11 ஆகிய நாட்களில் தேசிய இந்திய மாணவர் சங்கமும் போராட்டத்தில் ஈடுபட்டது. இந்த நிலையில், போராட்டம் நடத்துவதற்கான இடம் இதுவல்ல என கூறி, ஜந்தர் மந்தரை டெல்லி போலீசார் மூடிவிட்டனர். ஜந்தர் மந்தரில் யாருக்கும் போராட அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதனை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. பொறுப்பு தலைமை நீதிபதி நிதின் வாசுதேவ் மற்றும் நீதிபதி சஞ்சய் சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில், வக்கீல் ஒருவர் நேற்று இதனை சுட்டிக்காட்டி, அவசர வழக்காக இதனை விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
அப்போது அவர், மக்களின் அமைதியான போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்றன என குற்றம் சாட்டியதுடன், பேச்சுரிமை மறுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். இதை கேட்டுக்கொண்ட நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. அதனால், அதன் போக்கை பார்த்து இது குறித்து விசாரிக்கலாம் என தெரிவித்தனர்.
இதேபோன்று, இந்திய தேசிய மாணவர்கள் அமைப்பு தலைவர் வினோத் ஜாக்கர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கடந்த 10-ந்தேதி நடந்த போராட்டத்தின்போது, தாக்குதல்கள் நடத்தப்பட்டன என குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளார். அந்நிய சக்திகள் ஊடுருவி இந்த தாக்குதலில் ஈடுபட்டனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாகவும் இன்று விசாரணை நடைபெற உள்ளது.