தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு விவகாரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜ் உள்பட பலர் கைது

கன்னட சாலுவாலி வாட்டாள் பக்ஷா அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் மற்றும் கன்னட தன்னார்வலர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு விவகாரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜ் உள்பட பலர் கைது
Published on

பெங்களூரு

தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜ் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகா - தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாக சிக்கல் நீடித்து வருகிறது. இதனையடுத்து, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

3,500 கன அடி தண்ணீர்

இதனிடையே, டெல்லியில் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காவிரியில் இருந்து 29-ந்தேதி முதல் (இன்று) தினமும் 3,500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உத்தரவிட்டது.

ஆனால், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிடவில்லை. இந்த நிலையில், தமிழகத்திற்கு நாளொன்றுக்கு 3,500 கன அடி வீதம் 15 நாட்களுக்கு கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் என்று காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னட சாலுவாலி வாட்டாள் பக்ஷா அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் மற்றும் கன்னட தன்னார்வலர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.

கர்நாடக அரசு முறையீடு

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்குமாறு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில், கர்நாடக அரசு முறையீடு செய்ய உள்ளது. கர்நாடகாவில் நீர் தேவை அதிகமாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் சூழ்நிலை தற்போது இல்லை என அம்மாநில அரசு கூறி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com