

புதுடெல்லி
சி.பி.ஐ. இயக்குநராக பிரவீன் சூட் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில், இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தலைமையில் தேர்வு குழு நேற்று கூடியது.
இதில், பிரவீன் சூட்டுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு அளிப்பதற்கான முடிவை குழு எடுத்தது. இது அவருக்கு வழங்கப்பட்ட 2-வது பதவி நீட்டிப்பாகும்.
கடந்த 2023-ம் ஆண்டு மே 25-ந்தேதி சி.பி.ஐ. இயக்குநராக பிரவீன் சூட் பொறுப்பேற்று கொண்டார். அவர், 2 ஆண்டுகளுக்கு அந்த பதவியில் நீடிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதத்தில், அவருக்கு ஓராண்டுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதன்படி, நடப்பு ஆண்டின் மே 24-ந்தேதி வரை அவர் சி.பி.ஐ. இயக்குநராக பதவி வகிப்பார்.
இந்த நிலையில், தேர்வு குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், அமைச்சரவையின் நியமன குழு, அவருக்கான ஓராண்டு பதவி நீட்டிப்புக்கான ஒப்புதலை அளித்துள்ளது. இதனை மத்திய அதிகாரிகள் அமைச்சகம் வெளியிட்ட உத்தரவு தெரிவிக்கின்றது.