சி.பி.எஸ்.இ. 10, 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

சி.பி.எஸ்.இ. 10, 12ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சி.பி.எஸ்.இ. 10, 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆண்டுத்தேர்வுகளும் நடைபெறவில்லை. தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு தொடர்ந்து ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என பெற்றோர்கள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தற்போது மாணவர்கள் தேர்வு எழுத சென்றால் கொரோனா பரவல் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதால் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் மாணவர்களின் செயல்முறை தேர்வு மற்றும் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இது தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்த தகவலில், தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பாக ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வியாழக்கிழமையன்று இது குறித்த அறிக்கையை சமர்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து இன்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அளித்துள்ள தகவலில், சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தேர்வுகளை நடத்த இயலாத சூழல் உள்ளது. எனவே மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் ஜூலை மாதம் திட்டமிடப்பட்ட சி.பி.எஸ்.இ. 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com