போர் நிறுத்தம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட காங்கிரஸ் வலியுறுத்தல்

பிரதமர் மோடி அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.

இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. இந்த தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வந்தது.

இந்த நிலையில், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இதை இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் உறுதி செய்துள்ளன.

இந்த நிலையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தை அமெரிக்கா அறிவித்து இருப்பது வரலாற்றில் இதுவரை இல்லாத ஒன்று. பிரதமர் மோடி அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்டி நாட்டின் பாதுகாப்பு குறித்த விவகாரத்தில் அனைத்து கட்சிகளின் கருத்துகளையும் கேட்க வேண்டும்.

கடந்த பதினெட்டு நாட்களில் நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், அதன்பிறகு நடந்த நிகழ்வுகள் குறித்து விவாதிக்க, கூட்டுத் தீர்மானத்தை நிரூபிக்க சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரை கூட்ட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com