போர் நிறுத்தம்: அமெரிக்கா தலையீடு - வைரலாகும் இந்திரா காந்தி பேசிய வீடியோ


போர் நிறுத்தம்: அமெரிக்கா தலையீடு - வைரலாகும் இந்திரா காந்தி பேசிய வீடியோ
x

பாகிஸ்தான் விவகாரத்தில் மூன்றாம் நாட்டு தலையீட்டை இந்தியா ஏற்காது என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந் தேதி நள்ளிரவில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது.இதில் பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய தளபதிகள் உள்பட 100 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதலை நடத்தின. இதற்கெல்லாம் தக்க பாடம் கற்பிக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானின் முக்கிய நகரங்கள் மீது டிரோன் தாக்குதலை தீவிரப்படுத்தியது. இதில் அந்த நாடு பலத்த அடிவாங்கியது. இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்களாக நடைபெற்று வந்த போர் நேற்று மாலை 5 மணி முதல் அமலுக்கு வந்ததாக இருநாட்டு அதிகாரிகளும் கூறினர்.

ஆனால் அதற்கு முன்னதாகவே இது நாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியிருந்தார். இந்த நிலையில் இந்தியா போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக டிரம்ப் முன்னரே கூறியது எப்படி என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன.

இதனிடையே டிரம்பின் ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்," ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் பிரச்சினையில் தீர்வினை எட்ட முடியுமா என்பது தொடர்பாக இரு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவேன் சிறப்பாக செயல்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைமைக்கு கடவுள் அருள் புரியட்டும்" எனக் கூறியிருந்தார்.

அவரது பேச்சை வரவேற்ற பாகிஸ்தான், இந்தியா பாகிஸ்தான் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் கருத்தை பாகிஸ்தான் வரவேற்பதாகவும், ஜம்மு காஷ்மீர் பிரச்சினைக்கான எந்த ஒரு நியாயமான நீண்ட காலத்திற்கும் ஐநா சபையின் தீர்மானத்தின்படி இருக்க வேண்டும். ஜம்மு காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்வதாக இருக்க வேண்டுமென கூறி இருந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா தனது கருத்தை தெரிவித்து இருக்கிறது.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்யஸ்தம் பேச தயார் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியிருந்த நிலையில், பாகிஸ்தான் விவகாரத்தில் மூன்றாம் நாட்டு தலையீட்டை இந்தியா ஏற்காது என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்றால், அது பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். அதே நேரத்தில், வேறு எந்த நாடும் இந்த விவகாரத்தில் தலையிட இந்தியா விரும்பவில்லை என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.

பாகிஸ்தான் உடனான இந்தியாவின் போர் நிறுத்த ஏற்பாட்டை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தது சமூகவலைதளங்களில் பேசும்பொருளாகி உள்ளது. ஒருதரப்பினர் அமைதி முயற்சிக்காக டிரம்பை பாராட்டும் அதே வேளையில் ஒரு தரப்பினர் டிரம்பின் அறிவிப்பை விமர்சித்து வருகின்றனர்.

இது ஒரு புறம்இருக்க, மறைந்த பிரதமர் இந்திராகாந்தி பாகிஸ்தான் விஷயத்தில் உதவி என்ற பெயரில்கூட எந்த ஒரு நாட்டின் தலையீட்டையும் அனுமதிக்க மாட்டோம் என்று, 1971இல் அமெரிக்காவில் பேசிய காணொளிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் டாக்டர் கரண் சிங் கூறுகையில், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்ததன் மூலம் பிரதமர் மோடி மிகச் சிறப்பாகச் செயல்பட்டார் என்றார். மேலும் மூன்றாம் தரப்பு தலையிடுவது இது முதல் முறை அல்ல என்று கூறினார்.

1 More update

Next Story