“கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்” - மாநிலங்களுக்கு மத்திய அரசு யோசனை

தொற்று பரவலை தடுக்க கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்குமாறு மாநிலங்களுக்கு யோசனை தெரிவித்து மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பதில் பரிசோதனைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. இதனால் தொற்று பாதிப்பு விரைவாக கண்டுபிடிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்படுகின்றனர். இது பரவலை தடுக்கிறது.

ஆனால் சில மாநிலங்களில் கொரோனா பரிசோதனை அளவு குறைந்துள்ளதாக மத்திய அரசுக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து மாநிலங்கள் கொரோனா மாதிரிகள் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக மாநிலங்களுக்கு யோசனைகள் கூறி மத்திய சுகாதாரத்துறை அமைச்சக கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா எழுதிய கடிதத்தில் கூறியுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* குறிப்பிட்ட பகுதிகளில் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் போக்கை கருத்தில் கொண்டு பரிசோதனைகளை அதிகரிக்க உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

* கொரோனாவுக்கு எதிராக பரிசோதனைகள் முக்கிய அங்கமாக உள்ளன. ஆனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தளத்தை பார்க்கிறபோது பல மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் மாதிரிகள் பரிசோதனை குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.

* தொற்று நோய் மேலாண்மையில் ஒரு முக்கிய உத்தியாக சோதனை உள்ளது.

ஏனெனில் இது புதிய கிளஸ்டர்கள் மற்றும் புதிய தொற்றுநோய் ஆபத்து பகுதிகளை அடையாளம் காண உதவுகிறது. இது கட்டுப்பாட்டு மண்டலங்களை அமைத்தல், தொடர்பு தடம் அறிதல், தனிமைப்படுத்துதல், பின்தொடர்தல் போன்றவற்றில் உதவியாக உள்ளது.

* அதிக ஆபத்தில் உள்ளவர்கள், அதிக பாதிப்புக்குள்ளாகும் நபர்களின் சோதனைகள் மூலம் நோய் தீவிரமான வகைக்கு முன்னேறுவதை தவிர்க்கலாம். பரவல் அதிகமாக இருக்கிற பகுதிகளில் பரவலையும் தடுக்கலாம்.

* தொற்று நோய் பரவுவதை திறம்பட கண்காணிக்கவும், பொதுமக்களை மையமாகக்கொண்ட உடனடி நடவடிக்கைகள் தொடங்கப்படுவதையும் உறுதிசெய்வதற்கு சோதனையை அதிகரிப்பது அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கடமை ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com