அமர்நாத் யாத்திரைக்கு அரசு உச்சக்கட்ட பாதுகாப்பை வழங்கும் - மத்திய மந்திரி உறுதி

கோப்புப்படம்
அமர்நாத் யாத்திரைக்கு மக்கள் அதிக அளவில் வர வேண்டும் என்று மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளார்.
மத்திய சுற்றுலா மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் 2 நாள் பயணமாக நேற்று காஷ்மீர் வந்தார். அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள மார்தண்ட் சூரிய கோவிலுக்கு இன்று அவர் சென்றார். பின்னர் பயங்கரவாதிகள் தாக்குதல் நடைபெற்ற சுற்றுலா தலமான பஹல்காமையும் பார்வையிட்டார். பின்னர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியதாவது:-
ஜூலை 3-ந் தேதி முதல் அமர்நாத் யாத்திரைக்கு மக்கள் அதிக அளவில் வர வேண்டும். அமர்நாத் யாத்திரை பாதுகாப்பானது. யாத்திரைக்கு இந்திய அரசும், மாநில அரசும் உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்க உறுதிபூண்டுள்ளன. பக்தர்களுக்கு ஒரு கீறல்கூட ஏற்படாது.
காஷ்மீர் பாதுகாப்பானது. சுற்றுலா பயணிகள் பள்ளத்தாக்கு பகுதிக்கு வந்து அதன் இயற்கை அழகை மட்டுமல்ல, அதன் வளமான கலாசாரத்தையும் காண வேண்டும். காஷ்மீரின் பாரம்பரியத்தையும், அதன் வரலாற்று மகத்துவத்தையும், தெய்வீகத்தையும், அதன் இயற்கை அழகையும் காண முயற்சிக்குமாறு இந்தியாவின் 140 கோடி மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
காஷ்மீரில் உள்ள பிரபலமான வரலாற்று நினைவு சின்னங்களை பாதுகாக்க மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, ஆனால் இன்னும் பலவற்றை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






