முப்படை தலைமை தளபதி அனில் சவுகானுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு - மத்திய அரசு உத்தரவு

முப்படைகளின் புதிய தலைமை தளபதி அனில் சவுகானுக்கு டெல்லி போலீசாரின் இசட் பிளஸ் ஆயுத பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.
முப்படை தலைமை தளபதி அனில் சவுகானுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு - மத்திய அரசு உத்தரவு
Published on

புதுடெல்லி,

நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதியாக பிபின் ராவத் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கடந்த ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி ஊட்டி அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் அவர் உயிரிழந்தார். இதனால் முப்படைகளின் தலைமை தளபதி பதவி காலியாகவே இருந்தது. இந்த பதவிக்கு சுமார் 10 மாதங்களுக்குப்பின் தற்போது புதிய அதிகாரியை மத்திய அரசு நியமித்து உள்ளது.

அதன்படி முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் அனில் சவுகான் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். இவர், ராணுவத்தில் பல நிலைகளில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் கடைசியாக கிழக்கு பிராந்திய ராணுவ தளபதியாக பதவி வகித்து கடந்த ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்றிருந்தார்.

இவர் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் ஏற்பட்ட கிளர்ச்சிகளை அடக்கியதில் திறம்பட பங்காற்றியவர் ஆவார். இவரும், மறைந்த முன்னாள் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தும் உத்தகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இருவரும் ஒரே படைப்பிரிவில் அதாவது கூர்க்கா அலகு 11-ல் பணியாற்றி உள்ளனர்.

இவர் முப்படைகளின் தலைமை தளபதியாக மட்டுமின்றி, பாதுகாப்பு மந்திரியின் ராணுவ ஆலோசகர், அணு ஆயுதக்கட்டளை ஆணையத்தின் ஆலோசகர் போன்ற பொறுப்புகளையும் வகிப்பார்.

இந்த நிலையில், முப்படைகளின் புதிய தலைமை தளபதி அனில் சவுகானுக்கு டெல்லி போலீசாரின் இசட் பிளஸ் ஆயுத பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக டெல்லி போலீசாருக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com