

பாட்னா,
பீகார் மாநிலம் முசபர்பூரில் உள்ள பிரபல ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி வளாகத்தில், பெண் மருத்துவர் ஒருவரிடம் பட்டப்பகலில் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் தலைநகரான பாட்னாவைச் சேர்ந்தவர் மதுலிகா சிங். இவர் முசபர்பூரில் உள்ள பிரபல ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரியில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வருகிறார். அதனால் ஆஸ்பத்திரிக்கு அருகிலுள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளார். இந்த நிலையில் மதுலிகா சிங், நேற்று (வெள்ளிக்கிழமை) பகல் நேரத்தில் தனது விடுதியிலிருந்து பிரசவ வார்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அவர் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள பிரேத பரிசோதனை அறை அருகே சென்றபோது, கருப்பு நிற அப்பாச்சி பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், கண் இமைக்கும் நேரத்தில் மருத்துவர் மதுலிகாவின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.
இந்த எதிர்பாராத தாக்குதலின் அதிர்ச்சியில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சக ஊழியர்களால் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஆஸ்பத்திரி வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளைப் பெற்று தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த ஆஸ்பத்திரி வளாகத்திற்குள்ளேயே புகுந்து, பெண் மருத்துவரைத் தாக்கி செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் சக மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.