நகைக்கடை விவகாரம்: சல்மான்கான் உட்பட 6 பேருக்கு சண்டிகர் போலீஸ் சம்மன்

நகைக்கடை திறப்பு தொடர்பாக தொழிலதிபர் அளித்த புகாரில், சல்மான்கான் உட்பட 6 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
நகைக்கடை விவகாரம்: சல்மான்கான் உட்பட 6 பேருக்கு சண்டிகர் போலீஸ் சம்மன்
Published on

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் சண்டிகர் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் அருண் குப்தா என்பவர் காவல்துறையினரிடம் அளித்துள்ள புகாரில், கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் சல்மான் கானின் பீயிங் ஹ்யூமன் நிறுவனத்தின் பெயரில் ஒரு நகைக்கடையை சண்டிகர் நகரில் தான் தொடங்கியதாகவும், அதற்காக ஒரு பெரிய தொகையையும் தான் செலவழித்துள்ளதாகவும் அருண் குப்தா கூறியுள்ளார்.

மேலும், கடைக்குத் தேவையான பொருட்கள் மற்றும் விளம்பரப் பணிகளுக்கான பொறுப்பை சல்மான் கான் தரப்பில் ஏற்றுக் கொள்வதாகக் கூறியதாகவும், ஆனால், கடை திறந்து பல நாட்களாகியும் பீயிங் ஹ்யூமன் அறக்கட்டளை நிர்வாகத்தினர் எந்த வேலைகளையும் செய்யவில்லை என்றும் அருண் குப்தா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

கடைக்குத் தேவையான பொருட்களை அனுப்பாததால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், கடை பூட்டப்பட்டிருப்பதாகவும், இதனால் தனக்கு மிகுந்த மன உளைச்சலும், பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளதாகவும் அருண் குப்தா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அருண் குப்தாவின் புகாரின் பேரில் நடிகர் சல்மான் கான், அவரது சகோதரி அல்விரா கான், பீயிங் ஹ்யூமன் அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட ஆறு பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதில், வரும் ஜூலை 13 ஆம் தேதி அவர்கள் அனைவரையும் நேரில் ஆஜராகும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com