‘சந்திரபாபு நாயுடு மனநோயாளி’ - சந்திரசேகர் ராவ் தாக்கு

சந்திரபாபு நாயுடு ஒரு மனநோயாளி என சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
‘சந்திரபாபு நாயுடு மனநோயாளி’ - சந்திரசேகர் ராவ் தாக்கு
Published on

ஐதராபாத்,

தெலுங்கானாவில் அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் கட்சிகள் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன. விகாராபாத் மாவட்டத்தின் பார்கி பகுதியில் நேற்று நடந்த பிரசார கூட்டம் ஒன்றில் காபந்து முதல்-மந்திரியும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர் ராவ் உரையாற்றினார்.

அப்போது அவர் ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை மிகவும் கடுமையாக விமர்சித்தார். மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த உரையில் அவர் கூறியதாவது:-

சந்திரபாபு நாயுடு ஒரு மனநோயாளி என நான் கூறுகிறேன். ஏனெனில் ஒருமுறை அவர், காடுகளை பாதுகாப்பதற்காக ஆடுகளுக்கு தடை விதிப்பேன் என்று கூறினார். ஆனால் ஆட்டினம் எப்போது தோன்றியது? அவர் எப்போது பிறந்தார்? இயற்கையின் படைப்பை தடை செய்வதற்கு நீங்கள் யார்?

ஐதராபாத்தை உலக வரைபடத்தில் சேர்ப்பதற்கு அவர் ஒரு கருவியாக இருந்ததாக கூறியிருக்கிறார். இந்த மனிதரை என்ன செய்வது? அவ்வளவு திறமை பெற்றவராக இருந்தால், அமராவதியை கட்டமைப்பதில் ஏன் தோல்வியுற்றார்? வெறும் கிராபிக்ஸ் மாதிரியை தவிர உண்மையான கட்டிடங்கள் எதுவும் அங்கு அமைக்கப்படவில்லை.

இது போன்ற மோசடி பேர்வழிகள் வாக்கு கேட்டு உங்களிடம் வந்து கொண்டிருக்கிறார்கள். நாம் கவனமாக இல்லையென்றால் ஏமாற்றப்படுவோம். இவ்வாறு சந்திரசேகர் ராவ் கூறினார்.

மேலும் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தெலுங்கானா ஜன சமிதி, இந்திய கம்யூனிஸ்டு போன்ற கட்சிகளையும் அவர் கடுமையாக தாக்கினார். அவரது இந்த பேச்சு தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com