10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இடம் பிடித்தால் பரிசு, ஹெலிகாப்டர் சவாரி சத்தீஷ்கார் அரசு அறிவிப்பு..!

சத்தீஷ்கார் அரசு 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் இடம் பிடிப்போரை ஹெலிகாப்டர் சவாரி அழைத்துச்செல்வதாக அறிவித்து உள்ளது.
கோப்புப் படம் ANI
கோப்புப் படம் ANI
Published on

ராய்ப்பூர்,

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் இடம் பிடிப்போரை ஹெலிகாப்டர் சவாரி அழைத்துச்செல்வதாக அறிவித்து, சத்தீஷ்கார் அரசு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சத்தீஷ்கார் மாநிலத்தில் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது.

இந்த நிலையில், தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 420 கி.மீ. தொலைவில் உள்ள பலராம்பூரில், தனது தொகுதிவாரி மக்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது, முதல்-மந்திரி பூபேஷ் பாகல் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இடம் பிடிக்கிற மாணவர்களுக்கு ஹெலிகாப்டர் சவாரி பரிசாக வழங்கப்படும்.

இதே வகுப்புகளில் மாவட்டங்களில் முதல் இடம் பிடிப்போருக்கும் இந்த ஹெலிகாப்டர் சவாரி காத்திருக்கிறது.

குழந்தைகளுக்கு உத்வேகம் அளிக்கவும், ஊக்குவிக்கவும் இந்த ஹெலிகாப்டர் சவாரிகளை மாநில அரசு வழங்கும். முதல்-மந்திரியின் ஹெலிகாப்டர் சவாரி மூலம் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் முதல் இடம் பெற்றவர்கள் புதிய உத்வேகம் பெறுவார்கள். வானில் பறப்பது என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாகும்.

ஹெலிகாப்டர் பயணம், குழந்தைகளின் மனங்களில் வாழ்க்கையிலும் விண்ணுயரப் பறக்கும் விருப்பத்தை வளர்க்கும் என்பது எனது நம்பிக்கை. மேலும், அவர்கள் தங்கள் லட்சியத்தை அடைவதற்காக தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்வார்கள் என்றும் நம்புகிறேன்.

சமீபத்தில் சாம்ரி தொகுதியில் உள்ள ஆத்மானந்தா ஆங்கில மீடியம் பள்ளிகளுக்கு சென்றிருந்தபோதுதான், மாணவர்களிடம் நிறைய திறமை இருக்கிறது, அதை ஊக்குவிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

நமது மாணவர்கள் ஒரு தனித்துவமான ஊக்குவிப்பை பெறுகிறபோது, ஒரு தனித்துவமான பரிசை பெறுகிறபோது, அவர்களுக்கு வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகம் பெருகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com