சாமியார் காளிசரண் கைது; சத்தீஸ்கர் காவல்துறையின் நடவடிக்கை மத்தியபிரதேச பா.ஜ.க. அரசு அதிருப்தி!

மத்தியபிரதேச மாநிலம் கஜுராஹோ பகுதியில் பதுங்கியிருந்த காளிசரண் மகாராஜை கைது செய்துள்ளனர்.
சாமியார் காளிசரண் கைது; சத்தீஸ்கர் காவல்துறையின் நடவடிக்கை மத்தியபிரதேச பா.ஜ.க. அரசு அதிருப்தி!
Published on

ராய்ப்பூர்,

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சாமியார் காளிசரண் மகாராஜ், சத்தீஸ்கர் மாநிலம் ராயப்பூரில் நடைபெற்ற ஆன்மீக மாநாட்டில் மகாத்மா காந்தி குறித்து தவறான வார்த்தையை பயன்படுத்தினார். மேலும் மகாத்மாவை சுட்டுக் கொன்ற கோட்சேவை பாராட்டி பேசினார். அவரது பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் அளித்த புகாரை அடுத்து காளிசரண் மீது ராய்ப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில்,மத்தியபிரதேச மாநிலம் கஜுராஹோ பகுதியில் பதுங்கியிருந்த காளிசரண் மகாராஜை, சத்தீஸ்கர் காவல்துறையின் 10 பேர் கொண்ட போலிஸ் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற கைது சம்பவத்துக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் விதத்தில் மத்தியபிரதேச மாநில அரசு கருத்துக்களை பதிவு செய்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளுங்கட்சியான காங்கிரஸ், மத்தியபிரதேச மாநில காவல்துறையிடம் உரிய தகவல் தெரிவிக்காமல் காளிசரணை கைது செய்துள்ளது. இதன்மூலம் இரு மாநிலங்களுக்கு இடையேயான நெறிமுறைகளை மீறியுள்ளது கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக சத்தீஸ்கர் போலீஸ் டி.ஜி.பியிடம் மத்தியபிரதேச போலீஸ் டி.ஜி.பி விரிவான விளக்கம் கேட்க உள்ளார். இன்று நடைபெற்ற கைது சம்பவத்துக்கு ஆட்சேபனையும் தெரிவிக்க உள்ளார் என்று மத்தியபிரதேச மாநில ஆளும் பா.ஜ.க. அரசு தெரிவித்துள்ளது.

சாமியார் காளிசரண் மகராஜ் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான மத்தியபிரதேச மாநில அரசின் இந்த கருத்துக்கு சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல் பதில் கூறுகையில், காளிசரண் மகாராஜை கைது செய்தது குறித்து சத்தீஸ்கர் போலீசார் அவரது குடும்பத்தினருக்கும், வழக்கறிஞருக்கும் தகவல் அளித்துள்ளனர். மேலும், அவர் 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

மகாத்மா காந்தியை இழிவுபடுத்தியவர் கைது செய்யப்பட்டதில், மத்திய பிரதேச உள்துறை மந்திரியும் & பா.ஜ.க தலைவருமான நரோத்தம் மிஸ்ராவுக்கு மகிழ்ச்சியா அல்லது வருத்தமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், சத்தீஸ்கர் காவல்துறையால் எந்த விதிகளும் மீறப்படவில்லை எனவும் வழக்கமான நடைமுறைகளின்படி தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com