டெல்லியில் முதல்-அமைச்சர் விஜய்.. மாலை பிரதமர் மோடியுடன் சந்திப்பு

பிரதமர் மோடியுடனான முதல்-அமைச்சர் விஜய்யின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
டெல்லியில் முதல்-அமைச்சர் விஜய்.. மாலை பிரதமர் மோடியுடன் சந்திப்பு
Published on

புதுடெல்லி,

டெல்லியில் முதல்-அமைச்சர் விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக வென்றது. இதையடுத்து. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட் சிகளுடன் கூட்டணி அமைத்து தவெக ஆட்சி அமைத்தது. முதல் அமைச்சர் விஜய் உட்பட 35 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக டெல்லி பயணம் செய்துள்ளார். சிறப்பு விமானம் மூலம் சென்னையில் இருந்து இன்று காலை 10 மணிக்கு புறப்பட்ட முதல்-அமைச்சர் விஜய், தற்போது டெல்லி சென்றடைந்தார்.

முதற்கட்டமாக தமிழ்நாடு அரசு இல்லத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் சென்றார். அவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது. அந்த மரியாதையை அவர் ஏற்றுக்கொண்ட்டார். இதையடுத்து மாலை 4.30 மணியளவில் பிரதமர் மோடியை, முதல்-அமைச்சர் விஜய் சந்திக்க உள்ளார். முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், மோடியுடன் நடைபெற இருக்கும் முதல் சந்திப்பு இது ஆகும்.

மத்திய மந்திரிகளை சந்திக்க திட்டம்

இந்த சந்திப்பின் போது, பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, வளர்ச்சித் திட்டங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒப்புதல்கள், மேகதாது அணை விவகாரம் மற்றும் 'பி.எம்.ஸ்ரீ' திட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் தேவைகள் குறித்த விரிவான மனுவை முதல்-அமைச்சர் விஜய், பிரதமர் மோடியிடம் சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்புக்கு பிறகு உள்துறை மந்திரி அமித்ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரையும் விஜய் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இன்று இரவு டெல்லியில் தங்கும் முதல் அமைச்சர் விஜய், நாளை (வியாழக்கிழமை) அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியையும், அதன் பின்னர் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டிருப்பதாகவும், அந்த சந்திப்பை முடித்ததும் அன்றைய தினமே முதல்-அமைச்சர் விஜய் சென்னை திரும்ப இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com