

புதுடெல்லி,
முதல்-அமைச்சர் விஜய் 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி சென்றார். முதல் நாளில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரையும், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி மற்றும் இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜாவையும் சந்தித்தார். அதன்பின்னர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் அவர் ஓய்வு எடுத்தார்.
இதனையடுத்து டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக்குழு கூட் டத்தில் முதல்-அமைச்சர் விஜய் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் தமிழக வளர்ச்சிக்கு தேவையான கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இந்த நிலையில், 3 நாள் டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு மங்களூரு புறப்பட்டுள்ளார் முதல்-அமைச்சர் விஜய். தமிழ்நாடு இல்லத்தில் இருந்து டெல்லி விமான நிலையம் சென்ற விஜய் அங்கிருந்து தனி விமானம் மூலம் மங்களூருக்கு புறப்பட்டுள்ளார். அங்கிருந்து 140 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு முதல்-அமைச்சர் விஜய் காரில் செல்ல உள்ளார்.
உடுப்பியில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவில் மிகவும் பிரபலமானதாகும். கர்நாடகம் மட்டுமின்றி தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் இந்த கோவிலுக்கு சென்று வழிபடுவதை வாடிக் கையாக வைத்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால் மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவும் இந்த கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தி உள்ளனர்.
அந்த வகையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாணியை பின்பற்றி தற்போதைய தமிழக முதல்-அமைச்சர் விஜயும் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். அத்துடன் அரசியல் எதிர்ப்புகள், மறைமுக எதிரிகளை வீழ்த்த சண்டி ஹோமம் நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.