

பெங்களூரு,
முதல்-அமைச்சர் விஜய், தனது 3 நாள் டெல்லி பயணைத்தை முடித்துவிட்டு கர்நாடக மாநிலம் மங்களூரு சென்றார். அங்கிருந்து புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு சாலை மார்க்கமாக முதல்-அமைச்சர் சென்றார். கோவில் வளாகம் வந்தடைந்த முதல்-அமைச்சர் விஜய்யை கோவில் அர்ச்சகர்கள் வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அர்ச்சகர்கள் முதல்-அமைச்சருக்கு பூரண கும்ப மரியாதை அளித்தனர்.
கோவிலுக்குள் செல்லும்போது முதல்-அமைச்சர் விஜய் மேல்சட்டை அணியவில்லை. அவரது பாதுகாவலரும் மேல்சட்டை அணியாமல் கோவிலுக்குள் சென்றார். இதன் பின்னர் சாமி தரிசனம் செய்த முதல்-அமைச்சர் விஜய், கோவில் பிரகாரத்தை சுற்றி வலம் வந்தார். கோவிலுக்கு 1 கிலோ 600 கிராம் எடையுள்ள 2.5 அடி நீள வெள்ளி வாளை காணிக்கையாக முதல்-அமைச்சர் விஜய் அளித்தார். அதன் பின்னர் விஜய் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.
முதல்-அமைச்சர் விஜய்யின் வருகையையொட்டி, கொல்லூர் மூகாம்பிகை கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, தடுப்புகள் அமைக்கப்பட்டு கோவில் வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் பெரும் ஆளுமைகளான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இருவரும் முதல்-அமைச்சராக இருந்தபோது கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.