

புதுடெல்லி,
தமிழக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக த.வெ.க. வென்றது. இதையடுத்து. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வி.சி.க., ஐ.யு.எம்.எல். ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து த.வெ.க. ஆட்சி அமைத்தது. முதல்-அமைச்சர் விஜய் உட்பட 35 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக விஜய், 2 நாட்கள் அரசுமுறைப் பயணமாக நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய விஜய், தொடர்ந்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாரமனை சந்தித்து பேசினார். அவர்களிடம் தமிழக அரசுக்கான பல்வேறு திட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்.
இதனை தொடர்ந்து, இன்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற குழு தலைவருமான சோனியா காந்தியை அவரது இல்லத்தில் தமிழக முதல்-அமைச்சர் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உடன் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியோடு தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு நீண்ட காலமாக நட்பு இருந்து வருகிறது. தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மை இல்லாத சமயத்தில் காங்கிரஸ் கட்சி முதலாவதாக ஆதரவு வழங்கியது.
அந்த அடிப்படையில், காங்கிரஸ் கட்சி தங்களுக்கு ஆதரவு வழங்கியதற்காக முதல்-அமைச்சர் விஜய் இன்றைய சந்திப்பின்போது தனது நன்றியை தெரிவிக்க உள்ளார். அப்போது அவருக்கு காலை விருந்துக்குக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பை தொடர்ந்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் நிதி உதவியோடு நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை முதல்-அமைச்சர் விஜய் இன்று திறந்து வைக்க உள்ளார். இதையடுத்து விஜய் தன்னுடைய டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்ப உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.