5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முக கவசம் தேவை இல்லை - மத்திய அரசு அறிவிப்பு

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முக கவசம் தேவை இல்லை என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முக கவசம் தேவை இல்லை - மத்திய அரசு அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

கொரோனாவின் 3-வது அலை சிறுவர்-சிறுமிகளையும் விட்டு வைக்கவில்லை. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்த நிலையில் குழந்தைகள் மற்றும் சிறார் தொடர்பான திருத்திய கொரோனா வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* 5 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு முக கவசம் தேவை இல்லை. 6-11 வயதிற்குட்பட்டவர்கள், பெற்றோரின் நேரடி மேற்பார்வையின் கீழ் பாதுகாப்பாகவும், சரியான முறையிலும் குழந்தையின் திறனை பொறுத்து முக கவசம் அணியலாம். 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் பெரியவர்களை போல முக கவசம் அணிய வேண்டும்.

* கொரோனா, ஒரு வைரஸ் தொற்று ஆகும். தீவிரமற்ற கொரோனா தொற்றை சமாளிப்பதில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு (ஆன்டிமைக்ரோபியல்) எந்தப் பங்கும் இல்லை. எனவே அறிகுறியற்ற மற்றும் லேசான பாதிப்புகளுக்கு சிகிச்சை அல்லது நோய்த்தடுப்புக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பரிந்துரைக்கக்கூடது.

* மிதமான மற்றும் கடுமையான பாதிப்புகளிலும் அதிகப்படியான நோய்த்தொற்றின் சந்தேகம் இல்லாவிட்டால், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பரிந்துரைக்கப்படக்கூடாது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரத்தம் உறைதல் அபாயத்தை கண்காணிக்க வேண்டும்

* அறிகுறியற்ற மற்றும் லேசான பாதிப்புகளில் ஸ்டீராய்டுகள் பரிந்துரைப்பதில்லை. ஏனெனில் அவை தீங்கு விளைவிக்கும். அதேநேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கடுமையான மற்றும் மோசமான தொற்று பாதிப்புகளுக்கு மட்டுமே அவை பரிந்துரைக்கப்படுகின்றன. ஸ்டீராய்டுகளை சரியான நேரத்தில், சரியான அளவிலும், சரியான கால அளவிலும் பயன்படுத்த வேண்டும்.

* கொரோனாவுக்கு பிந்தைய பராமரிப்பை பொறுத்தவரை, அறிகுறியற்ற அல்லது லேசான தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழக்கமான குழந்தை பராமரிப்பு, பொருத்தமான தடுப்பூசி (தகுதி இருந்தால்), ஊட்டச்சத்து ஆலோசனை மற்றும் உளவியல் ஆதரவு ஆகியவற்றை பெற வேண்டும்.

இவ்வாறு மத்திய அரசின் வழிகாட்டுதல்களில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com