ஹசாரேவை கொல்ல சதி திட்டம்; 9 வருடங்கள் கடந்தும் வழக்கை விசாரித்து வரும் சி.ஐ.டி.

முன்னாள் மந்திரி தன்னை கொல்ல சதி திட்டம் தீட்டினார் என அன்னா ஹசாரே தொடுத்த வழக்கு 9 வருடங்களாக சி.ஐ.டி.யின் விசாரணை நிலையில் உள்ளது ஆர்.டி.ஐ. தகவலில் தெரிய வந்துள்ளது.
ஹசாரேவை கொல்ல சதி திட்டம்; 9 வருடங்கள் கடந்தும் வழக்கை விசாரித்து வரும் சி.ஐ.டி.
Published on

உஸ்மானாபாத்,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மந்திரியாக இருந்தவர் பதம்சின் பாட்டீல் (வயது 78). இவர் உள்பட 5 பேர் மீது சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பரில் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் பராஸ்மல் ஜெயின் என்ற கூலி படை தலைவனுக்கு பணம் கொடுத்து தன்னை கொல்ல பதம்சின் உள்ளிட்டோர் சதி செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இதுபற்றிய வழக்கில் பாட்டீல் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றம் ஒன்றால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு பின் சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பவன்ராஜே நிம்பல்கர் கடந்த 2006ம் ஆண்டு ஜூன் 3ல் அரசியல் பகையால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்புடைய வழக்கில் சதி திட்டம் தீட்டி கொலை செய்த குற்றச்சாட்டில் பதம்சின் பாட்டீல் மீது விசாரணை நடந்து வருகிறது.

நீதிமன்ற விசாரணையில் நீதிபதியின் முன் பராஸ்மல் கூறும்பொழுது, நிம்பல்கர் மற்றும் ஹசாரேவை கொல்ல ரூ.30 லட்சம் பணத்தினை பதம்சின் தனக்கு கொடுத்தபொழுது, ஹசாரேவை கொல்ல முடியாது என மறுத்து விட்டேன் என கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஹசாரே தொடர்புடைய வழக்கின் விவரம் பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பவன்ராஜேவின் மகனான ஜெய்ராஜே நிம்பல்கர் சமீபத்தில் விளக்கம் கேட்டுள்ளார்.

இதற்கு கிடைத்த பதிலில், விசாரணை இன்னும் நடந்து வருகிறது. இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என தெரிய வந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com