

புதுடெல்லி
டெல்லி ஜந்தர் மந்தரில் அத்துமீறல் தொடர்பாக கைது செய்யப்பட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் 2 பேருக்கும் 2 நாட்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார் பதவி விலகல் தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் பல்வேறு இடங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் காந்தி ஜெயந்தி அன்று ஆம் ஆத்மி கட்சியும், இந்திய மாணவர் சங்கம், இந்திய தேசிய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் சங்கம் போன்ற மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தின. அதன்பின்னர் இந்த போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டது. சமீபத்தில் 10 மற்றும் 11 ஆகிய நாட்களில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சி.ஜே.பி.) சார்பிலும் போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்த சூழலில், டெல்லியில் ஜந்தர் மந்தருக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சவுரவ் தாஸ் மற்றும் தேசிய செய்தி தொடர்பாளர் அசுதோஷ் ரன்கா ஆகிய இருவரும் கடந்த 13-ந்தேதி வருகை தந்தனர்.
அப்போது அவர்களிடம், இந்த பகுதியில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்தனர். அவர்கள் இருவருடன் 10-க்கும் மேற்பட்டோர் தேசிய கொடியை ஏந்தியபடி வந்தனர். பூட்டியிருந்த வாசல் கதவுகளின் மீது ஏறி, அவர்கள் மறுபுறம் சென்றனர். இதனை தொடர்ந்து, அத்துமீறலில் ஈடுபட்ட செய்தி தொடர்பாளர்கள் இருவர் மற்றும் அவர்களுடன் சென்ற அனைவரையும் டெல்லி போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி, அக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சவுரவ் தாஸ் மற்றும் தேசிய செய்தி தொடர்பாளர் அசுதோஷ் ரன்கா ஆகிய இருவரும் 5 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். இதன்பின்னர் அவர்கள் 2 பேரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், 5 நாள் காவல் முடிந்ததும், அவர்கள் இருவரும் மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிறப்பு மாஜிஸ்திரேட் முன் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் 2 பேருக்கும் 2 நாட்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.
இதனையடுத்து, அவர்கள் இரண்டு பேரும் மீண்டும் திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், இந்த நீட்டிப்பு உத்தரவுக்கு எதிராக அவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், இந்த மனுவை அவர்கள் இன்று வாபஸ் பெற்று கொண்டனர். அவர்களின் காவல் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், சவுரவ் தாஸ், அசுதோஷ் ரன்கா இருவரும் டெல்லி சிறப்பு நிர்வாக நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, சவுரவ் தாஸ், அசுதோஷ் ரன்கா ஆகிய இருவரையும் விடுதலை செய்து, டெல்லி சிறப்பு நிர்வாக நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அவர்கள் 2 பேரும் அமைதியை காப்போம் என கூறியுள்ளனர் என்று மூத்த காவல் அதிகாரி ஒருவர் கூறினார். அதனடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். இதனால், 7 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் இருவரும் விடுவிக்கப்படுகின்றனர்.