

புது டெல்லி,
டெல்லியில் தேர்தல் தலைமை அதிகாரி பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாளை 10-ந்தேதி நடைபெற உள்ள போராட்டத்தை முன்னிட்டு, 57 மெட்ரோ ரெயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களை மூடுவது குறித்து டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகத்திடம், டெல்லி போலீசார் கோரிக்கை வைத்துள்ளனர்.
டெல்லியில் தேர்தல் தலைமை அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாளை 10-ந்தேதி டெல்லியின் ஜந்தர் மந்தர் உள்ளிட்ட பகுதிகளில் சிஜேபி அமைப்பினர் மற்றும் பல்வேறு மாணவர்கள் அமைப்பினர் இணைந்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) டெல்லி போலீசார் அனுப்பிய கடிதத்தில், இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணி முதல் 57 மெட்ரோ ரெயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களை மூடுவது குறித்து பரிசீலிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த நிலையங்களில் மெட்ரோ ரெயில்களின் சேவை இடைவெளியையும் அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை சீராகும் வரை, நாளையும் இந்த கட்டுப்பாடுகளைத் தொடர வேண்டியிருக்கலாம் என போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
மக்கள்தொகை நெருக்கடி மிகுந்த ராஜீவ் சவுக், சென்ட்ரல் செக்ரட்டேரியட், படேல் சவுக், ஜன்பத், ஜாமியா மில்லியா இஸ்லாமியா, ஷாதரா, இந்திரபிரஸ்தா, காஷ்மீரி கேட், கரோல் பாக், ஹவுஸ் காஸ், லஜ்பத் நகர், ஐ.டி.ஓ., சுப்ரீம் கோர்ட் மற்றும் மண்டி ஹவுஸ் உள்ளிட்ட முக்கிய நிலையங்கள் இதில் அடங்கும். மேலும், சட்டம்-ஒழுங்கு நிலவரத்தைப் பொறுத்து மெட்ரோ ரெயில்களின் இயக்க இடைவெளியும் குறைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் டெல்லியின் மத்திய, வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் உள்ள பல மெட்ரோ நிலையங்களை உள்ளடக்கியுள்ளன. 2 மெட்ரோ வழித்தடங்களிலும் உள்ள ஐஎன்ஏ நிலையமும் சேர்க்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, புது டெல்லி மற்றும் ஹஸ்ரத் நிஜாமுதீன் ஆகிய 2 பிரதான ரெயில் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த இந்திய ரெயில்வே அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, நாளை (சனிக்கிழமை) அன்று காலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த நிலையங்களுக்கு வரவிருந்த அனைத்து மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
போராட்டத்தின்போது அதிக அளவில் மக்கள் கூட வாய்ப்பு இருப்பதால், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த பரிந்துரையை போலீசார் முன்வைத்துள்ளனர். இருப்பினும், 57 நிலையங்களிலும் வாயில்களை மூடுவது மற்றும் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்வது தொடர்பான இறுதி முடிவை டெல்லி மெட்ரோ நிர்வாகமே எடுக்க வேண்டும். எனவே, டெல்லியில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளவர்கள், பயணத்திற்கு முன்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைச் சரிபார்த்துக்கொள்வது அவசியம்.