

எதிர்க்கட்சிகள் ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தல் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி 19 எதிர்க்கட்சி தலைவர்களுடன் காணொலி காட்சி வாயிலாக பேசினார்.அதேபோல ஆளும் கட்சியான பா.ஜனதாவும் வெற்றிக்கான வியூகங்களை வகுத்து வருகிறது.
இந்தநிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-
பா.ஜனதா முயற்சி தோல்வி
மராட்டியத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாலையில் நடைபெற்ற ரகசிய பதவி பிரமாணம் (தேவேந்திர பட்னாவிஸ், அஜித்பவார் பதவி ஏற்பு) மூலம் கவர்னர் மாளிகையான ராஜ்பவனின் கவுரவம் கேள்விக்குறி ஆனது. ஆனால் மாநிலத்தில் பா.ஜனதாவால் ஆட்சி அமைக்க முடியவில்லை. அதேபோல மேற்கு வங்காளத்தில் வெற்றிபெற பா.ஜனதா எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் சென்று முடிந்தது. பல ஊர்வலங்களை நடத்தியும் அவர்களால் அங்கு சாதிக்க முடியவில்லை. மேற்கு வங்காளம் மற்றும் மராட்டியம் தேர்தல் போர்க்களத்திலும், அரசியல் சதுரங்கத்திலும் பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும் என்பதை காட்டியுள்ளது.
ஜன் ஆசிர்வாத் யாத்திரை
நாம் ஏதும் செய்யவில்லை என்றால் தற்போது பா.ஜனதா நடத்தும் ஜன் ஆசிர்வாத் யாத்திரை மக்களை மீண்டும் வசியம் செய்யும்.யாத்திரையில் பங்கேற்ற மத்திய மந்திரிகள் இதுவரை ஒன்றும் செய்யவில்லை. ஆனால் அவர்கள் எதிர்க்கட்சிகளை தொடர்ந்து தாக்கி பேசினர்.இந்த மந்திரிகள் பெரும்பாலானவர்கள் பா.ஜனதாவுக்கு வெளியில் இருப்பவர்கள். ஆர்ப்பணிப்புள்ள பா.ஜனதா தொண்டர்கள் முட்டாள்கள் போல இந்த யாத்திரையில் பங்கேற்கிறார்கள்.
பாழடைந்த வீடுகள்
இத்தகைய சூழ்நிலையில் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவு என்பது விவேகமான மற்றும் புத்திசாலித்தனமான வியூகத்தை பொறுத்தது. எதிர்க்கட்சிகள் அதை செய்ய வேண்டும்.இதற்கான முன்தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முதலில் எதிர்க்கட்சிகள் மக்களின் நம்பிக்கையை வெல்ல வேண்டும்.19 அரசியல் கட்சிகள் ஒன்றிணைவது மோடி தலைமையிலான அரசை பலவீனப்படுத்தி வெளியேற்ற வழிவகுக்கும் என்று கருதுவது தவறு.ஏனென்றால் இந்த 19 கட்சிகளில் பழைய பாழடைந்த வீடுகளை போன்ற பல கட்சிகள் உள்ளன. இந்த பாழடைந்த வீடுகளை புதுப்பித்து புது பொலிவை கொண்டு வராவிட்டால், மற்றொரு பக்கத்தில் உள்ள பா.ஜனதா ஒற்றுமையின் அதிர்ச்சியை எதிர்கொள்ளாது.வெறும் கலந்துரையாடல்களுக்கு பதில் ஒரு திட்டவட்டமான செயல் திட்டத்தை வகுப்பது காலத்தின் கட்டாயமாகும். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பலவீனமான அடித்தளத்தில் அமையக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.