

கோரமங்களா,
பெங்களூரு கோரமங்களா பகுதியில் சி.என்.ஜி. கியாஸ் விற்பனை நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விற்பனை நிலையத்துக்கு காரில் கியாஸ் நிரப்புவதற்கு வாடகை கார் டிரைவர் ஒருவர் வந்தார். அப்போது காருக்கு கியாஸ் நிரப்ப சென்றபோது, திடீரென கியாஸ் நிரப்பும் குழாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் ஊழியர்கள் கியாஸ் நிரப்ப முடியாமல் தவித்தனர்.
இந்தநிலையில் திடீரென கியாசின் அழுத்தம் தாங்காமல், குழாய் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் கியாஸ் விற்பனை நிலைய ஊழியர், கார் டிரைவர் உள்ளிட்டோர் பலத்த தீக்காயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். இதனை பார்த்த அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் உடனடியாக கார் டிரைவரை மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கார் டிரைவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், பார்வை இழக்கும் அபாய நிலையில் அவர் உள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.