டெல்லியை தொடர்ந்து 11-ம் தேதி புனேவில் போராட்டத்தை நடத்த 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' முடிவு

கரப்பான் பூச்சி கட்சியினரின் போராட்டம் டெல்லியில் 6-ம் தேதி ஒரு கலகலப்பை ஏற்படுத்தியது.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி
Published on

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் போலி தொழில்முறைப் பட்டங்கள் மற்றும் இணைய விமர்சனம் தொடர்பான ஒரு வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த், சில வேலையில்லாத இளைஞர்கள், ஆர்வலர்கள் மற்றும் அமைப்பின் விமர்சகர்களை கரப்பான் பூச்சிகளுடன் ஒப்பிட்டுள்ளார்.

இதற்கு இளைஞர் சமுதாயத்தில் எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைத்தளங்களில் ஈடுபாடு கொண்ட பல இளைஞர்கள் இதனை எதிர்த்தனர்.

கரப்பான்பூச்சி

இதனை மராட்டிய மாநிலம் சம்பாஜி நகரைச் சேர்ந்த அபிஜித் தீப்கே என்ற 30 வயது இளைஞர் வேடிக்கையாக எதிர்கொண்டார். நீதிபதி குறிப்பிட்ட கரப்பான்பூச்சி என்ற வார்த்தையைக் கொண்டு 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் ஒரு தளத்தை உருவாக்கி நையாண்டி கருத்துகளை (மீம்ஸ்) பதிவிடத் தொடங்கினார்.

இதற்கு இளைஞர் வட்டத்தில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. சில நாட்களிலேயே பல லட்சம் பேர் அதில் இணைந்தனர். இதன் செயல்பாடுகள் தீவிரம் அடைந்ததால் அந்த வலைத்தளங்கள் முடக்கப்பட்டன. ஆனாலும் இளைஞர்கள் பல இடங்களில் கரப்பான் பூச்சி முகமூடிகளை அணிந்து வெளிப்படத் தொடங்கினர்.

நீட் வினாத்தாள் கசிவு

இதற்கிடையே சி.பி.எஸ்.இ. தேர்வு டிஜிட்டல் மதிப்பீடு மற்றும் நீட் வினாத்தாள் கசிவு போன்ற குறைபாடுகளை கரப்பான் பூச்சி அமைப்பினர் கடுமையாக எதிர்த்தனர். இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் மாதம் 6-ந்தேதி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கான அனுமதி பெறும் நடவடிக்கைகளை கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் சவுரவ் தாஸ், விஜேதா தஹியா ஆகியோர் மேற்கொண்டனர். கட்சி நிறுவனரான அபிஜித் தீப்கே அமெரிக்காவில் இருந்தார். ஆர்ப்பாட்டம் நடைபெறும் நாளில் இந்தியா வருவதாக தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் ஆர்ப்பாட்ட நாளான நேற்று காலை ஜந்தர் மந்தரில் அந்த கட்சியினர் குவிய தொடங்கினர். கூட்டம் தொடக்கத்திலேயே வராததால் பலரும் இதனை கிண்டலாக விமர்சித்தனர். நேற்று காலை வரை ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கிடைக்காமல் இருந்தது.

ஆர்ப்பாட்டம்

இதற்கிடையே அபிஜித் தீப்கே டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கினார். அடுத்த சில நிமிடங்களில் நாடாளு மன்ற தெரு போலீசார் மாலை 5 மணி வரை ஆர்ப்பாட்டத்துக்கான அனுமதியை அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து ஜந்தர் மந்தரில் கூட்டம் திரண்டது. சில மணிநேரத்தில் அங்கு பெருங்கூட்டம் கூடியது. இந்த நிலையில் அபிஜித் தீப்கே அங்கு வந்து உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக செயற்பாட்டாளர்

சோனம் வாங்க்சும் பங்கேற்று ஆதரவு அளித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் திருநங்கைகள், பெண்கள், மாணவர்கள் என பலதரப்பினரும் கலந்து கொண்டனர். பலர் கரப்பான் பூச்சி படம் கொண்ட முகமூடி அணிந்திருந்தனர். இதற்கிடையே இந்த ஆர்ப்பாட்டத்தை எதிர்த்து போராட வந்த சிலர் கைது செய்யப்பட்டனர். மேலும் கரப்பான்பூச்சி ஆர்ப்பாட்டம் தேசநலனுக்கு எதிரான நடவடிக்கை என்ற குற்றச்சாட்டின் பேரில் அந்த கட்சி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கரப்பான் பூச்சி கட்சியினரின் போராட்டம் டெல்லியில் நேற்று ஒரு கலகலப்பை ஏற்படுத்தியது.

புனே

இந்தநிலையில், டெல்லியைத் தொடர்ந்து, வரும் 11ம் தேதி புனேவிலும் போராட்டத்தை நடத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 6ம் தேதி சிஜேபி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com