

புதுடெல்லி,
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருடன் 2-வது முறையாக மத்திய அரசு நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. தர்மேந்திர பிரதான் பதவி விலகல் கோரிக்கை மீது இன்று (சனிக்கிழமை) மதியம் முக்கிய முடிவு எடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது.
நீட் வினாத்தாள் விவகாரம் தொடர்பாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானை பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருடன் அரசாங்கம் தரப்பில் மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று 2-வது முறையாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை இரு தரப்பினருக்கும் பொதுவாக அரசியல் சாசன கிளப்பில் நடைபெற்றது. அரசாங்கம் தரப்பில் சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா, பிரதமர் அலுவலக மந்திரி ஜிதேந்திர சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். கரப்பான் பூச்சி ஜனதா தரப்பில் இருந்து அதன் செய்தி தொடர்பாளர்கள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் பங்கேற்றனர். கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.
கூட்டம் முடிந்ததும் ஜே.பி.நட்டா நிருபர்களிடம் கூறுகையில், “கூட்டத்தில் நாங்கள் அவர்களின் கவலைகளைக் கேட்டறிந்தோம். பிரச்சினைகள் பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்பட்டன. தேர்வு சீர்திருத்தங்களுக்காக 3 முக்கிய கோரிக்கைகளையும், 5 ஆலோசனைகளையும் முன்வைத்தனர். இது தொடர்பாக அரசாங்கம் கலந்துரையாடல்களை நடத்திய பிறகு, நாளை (அதாவது இன்று) பிற்பகல் மீண்டும் அவர்களைச் சந்திப்போம். அப்போது அரசாங்கத்துக்குள் நாங்கள் நடத்திய கலந்துரையாடல் குறித்து தெரிவிப்போம்” என்று அவர் கூறினார்.
இதுபோல கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் தேசிய செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா கூறுகையில், “தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைக்கு. நாளை (இன்று) மதியம் வரை அரசு அவகாசம் கேட்டுள்ளது. அவரை விரைவில் அரசு பதவியில் இருந்து நீக்கும் என நம்புகிறோம். தற்கொலை செய்து கொண்ட நீட் தேர்வர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவது மற்றும் மாணவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கைகள், சட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவது ஆகிய இரண்டு 2 கோரிக்கைகளுக்கும் கொள்கை ரீதியாக குறிப்பிடத்தக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
எங்களின் 3 முக்கிய கோரிக்கைகளில் 2-க்கு அரசாங்கம் மிகவும் சாதகமான பதிலை அளித்துள்ளது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் போராட்டக்காரர்களுக்கு எதிராக எந்த முதல் தகவல் அறிக்கைகளோ அல்லது சட்ட வழக்குகளோ பதிவு செய்யப்படாது என்ற இறையாண்மை உத்தரவாதத்துக்கான எங்கள் கோரிக்கையும் இதில் அடங்கும்.
இது தொடர்பாக விரைவில் எழுத்துப்பூர்வமான ஒப்பந்தத்தைப் பெறுவோம் என்று நம்புகிறோம். தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்தும் விரிவான விவாதம் நடைபெற்றது. நாளை (இன்று) பிற்பகல் மற்றொரு சந்திப்புக்கும் மத்திய அரசு முன்மொழிந்துள்ளது” என்று கூறினார்.
முன்னதாக தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாளை (ஜூலை 26ம் தேதி) நாடு தழுவிய போராட்டத்துக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அழைப்பு விடுத்துள்ளது.அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.