காதலி பேசாததால்.. மனமுடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது

காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
காதலி பேசாததால்.. மனமுடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது
Published on

சிக்பள்ளாப்பூர்,

கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்தவர் முகமது ஷபீர் (வயது 26). இவர் கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் (மாவட்டம்) தாலுகா பெரேசந்திரா கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி இறுதியாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவரது அறை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சக மாணவர்கள், கதவை திறக்குமாறு தட்டினர். ஆனால் அவர் திறக்கவில்லை.

பின்னர் ஜன்னல் வழியாக பார்த்தபோது, முகமது ஷபீர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி வார்டனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர், போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

இதையடுத்து தூக்கில் பிணமாக தொங்கிய முகமது ஷபீரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே முகமது ஷபீரின் அறையில், அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில், நான் எதையும் நிறுத்தவில்லை. நான் என்றென்றும் உன்னை நேசிக்கிறேன். என் முதலும் நீதான், முடிவும் நீதான் என உருக்கமாக எழுதி இருந்தார். இதையடுத்து அவர் காதல் தோல்வியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், முகமது ஷபீர் தன்னுடன் படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களாக அவரது காதலி, முகமது ஷபீருடன் செல்போனில் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதுபற்றி நேரில் கேட்டும் எந்த பதிலும் அளிக்கவில்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்து முகமது ஷபீர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com