டெல்லியில் அடுத்தாண்டு ஜன.1ஆம் தேதி வரை பட்டாசு பயன்பாட்டுக்கு தடை

டெல்லியில் அடுத்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி வரை பட்டாசு பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் கடந்த சில ஆண்டுகளாக காற்று மாசு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதிகபட்சமாக தலைநகர் டெல்லி காற்று மாசுவால் திணறி வருகிறது. அங்கு கடந்த சில ஆண்டுகளாகவே காற்றின் தரம் மிக மிக மோசமான நிலையில் இருந்து வருகிறது. இதனால் டெல்லியில் கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை சமயத்தில் பட்டாசுகள் வெடிக்க தடை அமலில் இருந்து வருகிறது. இந்த சூழலில் நாடு முழுவதும் அக்டோபர் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் பட்டாசுகளை விற்க, வெடிக்க, சேமித்து வைக்க 2023ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வரை தடை விதித்து அம்மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால்ராய் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "டெல்லியில் இந்த முறை ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கும், நேரடி விற்பனைக்கும் தடை விதிக்கப்படுகிறது. இந்த கட்டுப்பாடு ஜனவரி 1, 2023 வரை அமலில் இருக்கும். தடையை கடுமையாக அமல்படுத்த டெல்லி போலீஸ், டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு மற்றும் வருவாய் துறையுடன் இணைந்து செயல் திட்டம் வகுக்கப்படும். டெல்லியில் கடந்த ஆண்டை போல் மாசு அபாயத்தில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில், இந்த முறையும் அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுகிறது" என்று அதில் அமைச்சர் கோபால்ராய் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com