மத்திய பட்ஜெட்டில் சுயஉதவி குழு பெண்களுக்கு சலுகை - வங்கி கணக்கில் இருப்பதை விட ரூ.5 ஆயிரம் கூடுதலாக எடுக்கலாம்

விவேகானந்தர் கருத்தை நினைவு கூர்ந்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டில் சுயஉதவி குழு பெண்களுக்கு சலுகை அறிவித்தார். இதன்மூலம் வங்கி கணக்கில் இருப்பதை விட அவர்கள் கூடுதலாக ரூ.5 ஆயிரம் ரொக்கமாக எடுக்கலாம்.
மத்திய பட்ஜெட்டில் சுயஉதவி குழு பெண்களுக்கு சலுகை - வங்கி கணக்கில் இருப்பதை விட ரூ.5 ஆயிரம் கூடுதலாக எடுக்கலாம்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியபோது பெண்கள் முன்னேற்றம் பற்றி கூறினார்.

அப்போது அவர், ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு சுவாமி விவேகானந்தர் ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் அவர், பெண்களின் நிலை முன்னேறாவிட்டால், உலகம் நலன் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. ஒற்றை இறக்கையை கொண்டு ஒரு பறவை பறப்பது சாத்தியம் இல்லை என கூறி இருந்தார். அந்த வகையில், பெண்களின் மிகப்பெரிய பங்களிப்புடன்தான் நாம் முன்னேற்றம் அடைய முடியும் என்பது இந்த அரசின் நம்பிக்கை என கூறினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, நடந்து முடிந்த தேர்தலில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் அதிகளவில் வாக்குப்பதிவு செய்துள்ளனர். இங்கே நாம் சாதனை அளவாக 78 பெண் எம்.பி.க்களைப் பெற்று இருக்கிறோம் என குறிப்பிட்டார்.

பெண்கள் நலனுக்கான அறிவிப்புகளையும் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

அப்போது அவர் கூறுகையில், இந்த அரசு முத்ரா, எழுந்து நில் இந்தியா, மகளிர் சுயஉதவி குழுக்கள் உள்ளிட்ட திட்டங்கள் மூலமாக பெண்களுக்கு ஆதரவு அளித்து ஊக்குவித்து வருகிறது. சரிபார்க்கப்பட்ட பெண்கள் சுயஉதவி குழு உறுப்பினர்கள் ஜன்தன் வங்கி கணக்கு வைத்திருந்தால் அவர்கள் கணக்கில் இருப்பதை விட ரூ.5 ஆயிரம் கூடுதலாக (ஓவர் டிராப்ட்) ரொக்கமாக எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படும். ஒவ்வொரு சுயஉதவி குழுவிலும் ஒருவர் முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கடன் பெற வழிவகை செய்யப்படும் என கூறினார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துக்கு ரூ.29 ஆயிரத்து 164 கோடியே 90 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 17 சதவீதம் அதிகம் ஆகும்.

ஊட்டச்சத்து, சமூக பாதுகாப்பு மற்றும் நலன்களை உள்ளடக்கிய சமூக சேவை துறைக்கு ரூ.4,178 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மகப்பேறு நலத்திட்டமான பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ.1,200 கோடியில் இருந்து ரூ.2,500 கோடி என இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு முதல் உயிருள்ள குழந்தை பிறப்புக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுவது குறிப்பிடத்தகுந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com