

புதுடெல்லி,
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த 5-ஆம் தேதி துவங்கியதில் இருந்து இரு அவைகளும் எதிர்க்கட்சி எம்.பிக்களின் அமளியால் முடங்கி வருகின்றன.
இந்த நிலையில், காங்கிரஸ் தங்கள் கட்சி எம்.பிக்கள் அனைவரும், மாநிலங்களவை நடவடிக்கையில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூன்று வரிகள் அடங்கிய கொறடா உத்தரவில், கட்சி இன்று எடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கும் வகையில், அனைத்து உறுப்பினர்களும் அவையில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில பிரச்சினைகளை மையப்படுத்தி மாநிலங்களவையில் அரசுக்கு நெருக்கடி கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, நேற்று இரவு கொறடா உத்தரவு தங்கள் எம்.பிக்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி, எஸ்.சி/எஸ்.டி சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பிரச்சினைகளை காங்கிரஸ் கட்சி எழுப்பி வருகிறது. அதேபோல், ஈராக்கில் இந்தியர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் அவையை தவறாக வழிநடத்தியதாக கூறி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் நோட்டீஸ் வழங்கியுள்ளது கவனிக்கத்தக்கது.
காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களை எம்.பிக்கள் கூட்டம் இன்று காலை நடைபெற இருப்பதாகவும் பிடிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.