மக்களவை சபாநாயகர் நாளை உரையாற்றும் கர்நாடக சட்டசபை கூட்டத்தை காங்கிரஸ் புறக்கணிக்கிறது: டி.கே.சிவக்குமார்

மக்களவை சபாநாயகர் உரையாற்றும் நாளைய சட்டசபை கூட்டத்தை காங்கிரஸ் புறக்கணிப்பதாக அக்கட்சி மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.
மக்களவை சபாநாயகர் நாளை உரையாற்றும் கர்நாடக சட்டசபை கூட்டத்தை காங்கிரஸ் புறக்கணிக்கிறது: டி.கே.சிவக்குமார்
Published on

காங்கிரஸ் புறக்கணிக்கிறது

கர்நாடக சட்டசபையின் கூட்டு கூட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா உரையாற்றுகிறார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சட்டசபையில் உறுப்பினர் அல்லாதவர்களின் வரிசையில் ஜனாதிபதி, கவர்னர் தவிர வேறு யாரும் பேச வாய்ப்பு இல்லை. ஆனால் பா.ஜனதா அரசு, மக்களவை சபாநாயகரை அழைத்து வந்து இன்று சட்டசபையில் உரையாற்ற வைக்கிறது. இதை நாங்கள் எதிர்க்கிறோம். மேலும் மக்களவை சபாநாயகர் பங்கேற்கும் இன்றைய சட்டசபை கூட்டத்தை காங்கிரஸ் புறக்கணிக்கிறது.

எதிர்க்க மாட்டோம்

பல்வேறு வரலாறுகளை கொண்ட சட்டசபைக்கு மக்களவை சபாநாயகரை அழைத்து வந்து அவப்பெயரை ஏற்படுத்த இந்த அரசு முயற்சி செய்கிறது. ஜனநாயகத்தில் இத்தகைய கூட்டத்தை நடத்த அனுமதி இல்லை. இந்த நிகழ்ச்சி மூலம், சட்டசபையின் மாண்பு குறையும். இத்தகைய கூட்டத்தை விதான சவுதாவில் உள்ள விருந்தினர் அரங்கத்தில் நடத்தினால் அதை நாங்கள் எதிர்க்க மாட்டோம். இதுகுறித்து நாங்கள் ஏற்கனவே அரசிடம் கூறிவிட்டோம். அவர்கள் இதை ஏற்கவில்லை.

சட்டசபையை அரசியல் மேடையாக பயன்படுத்துவது சரியல்ல. சபாநாயகர் இருக்கையில் ஜனாதிபதி, கவர்னர் மட்டுமே அமர தகுதி படைத்தவர்கள் மற்றவர்களுக்கு அதில் அமர தகுதி இல்லை. அதனால் நாங்கள் இந்த கூட்டத்தை புறக்கணிக்கிறோம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com