

பரூச்,
பிரதமர் மோடி பரூச், ராஜ்கோட், சுரேந்தர்நகர் ஆகிய தொகுதிகளில் நடந்த பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் நேரத்துக்கு தக்கபடி தனது நிறத்தை மாற்றிக்கொள்ளும் என்பதை குஜராத் மக்கள் அறிவார்கள். அதேபோல் இப்போதும் காங்கிரஸ் தனது நிறத்தை மாற்றிக்கொண்டு உள்ளது. நமது சகோதரர்களுக்கு இடையே தடுப்பு சுவரை எழுப்புகிறது.
ஒரு சாதிக்கு எதிராக இன்னொரு சாதியையும், ஒரு மதத்தினர் இன்னொரு மதத்தினருடன் மோதிக்கொள்வதையும் தூண்டிவிட்டு நாட்டில் சமூகத்தை பிளவுபடுத்த முயற்சிக்கிறது. நீங்கள் ஒருவருக்கொருவர் தீவிரமாக சண்டையிடுவதில்தான் அவர்கள் கவனமாக இருப்பார்கள். இந்த மோதலில் சண்டையிட்டு நீங்கள் மடியலாம். ஆனால் காங்கிரசோ அதில் கிடைக்கும் பலனை அனுபவிக்க விரும்புகிறது.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் முறைகேடு நடக்கலாம் என்று மராட்டிய காங்கிரசின் மூத்த தலைவர் ஷெசாத் குற்றம்சாட்டினார். ஆனால் அவருடைய குரலை ஒடுக்கவும், சமூக ஊடகங்கள் குழுவில் இருந்து அவரை நீக்கவும் முயற்சி நடக்கிறது. உங்கள் வீட்டிலேயே(காங்கிரஸ்) ஜனநாயகம் இல்லாதபோது அதை எப்படி நீங்கள் நாட்டில் நடைமுறைப்படுத்துவீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.