மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் - மல்லிகாஜுன கார்கே வலியுறுத்தல்

மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உடனடியாக சுகாதார நலன்கள் மற்றும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களும் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். முன்னதாக தொழிலாளர்கள் சிக்கியிருந்த பகுதிக்குள் குழாய் வழியாக சென்ற தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், தொழிலாளர்களை அதன் வழியாகவே ஒருவர் பின் ஒருவராக இரவு 8 மணி அளவில் மீட்டுவரத்தொடங்கினர். அவர்கள், குழாய்க்குள், சக்கரங்கள் பொருத்திய 'ஸ்டிரெச்சர்கள்' மூலம் மீட்டுவரப்பட்டனர்.

17 நாட்களாக போராடி தொழிலாளர்களை மீட்ட மீட்பு குழுக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் தொழிலாளர்களை மீட்ட மீட்பு குழுவின் அர்ப்பணிப்பு, திறமை மற்றும் விடாமுயற்சியை காங்கிரஸ் பாராட்டியுள்ளது. மேலும் சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உடனடியாக சுகாதார நலன்கள் மற்றும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜுன கார்கே தனது எக்ஸ் வலைதளத்தில், "தொழிலாளர்கள் சுரங்கப்பாதையில் இருந்து பத்திரமாக வெளியே கொண்டு வரப்பட்டது அனைவருக்கும் மிகுந்த ஆறுதலையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. 140 கோடி இந்தியர்களின் பிரார்த்தனையால், மீட்பு பணி வெற்றிகரமாக முடிந்தது. மீட்பு குழுக்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும். மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உடனடியாக சுகாதார நலன்கள் மற்றும் உரிய இழப்பீடு வழங்க அரசு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது போன்ற நிலை மீண்டும் ஏற்படாத வகையில் கட்டுமானத்தில் உள்ள அனைத்து திட்டங்களிலும் பாதுகாப்பு தணிக்கை நடத்தப்பட வேண்டும்" என்று அதில் பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com