குதிரை பேரத்தில் ஈடுபட பாஜக முயற்சி? - ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஐதராபாத்திற்கு இடமாற்றம்

முதல்-மந்திரி சம்பாய் சோரன் நாளை மறுநாள் தனது பெரும்பான்மையை ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் நிரூபிக்க உள்ளார்.
குதிரை பேரத்தில் ஈடுபட பாஜக முயற்சி? - ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஐதராபாத்திற்கு இடமாற்றம்
Published on

ஐதராபாத்,

ஜார்க்கண்ட் மாநில முதல்-மந்திரியாக இருந்த ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சம்பாய் சோரன் புதிய முதல்-மந்திரியாக நேற்று கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி,  காங்கிரஸ் உட்பட சில கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி நடத்தி வருகிறது.

இதனால் பதவி ஏற்றுக்கொண்ட சம்பாய் சோரன், 10 நாட்களுக்குள் சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பா.ஜ.க.வால் தங்களது எம்.எல்.ஏ.க்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் அவர்களை ஜதராபாத்திற்கு தனி விமானம் மூலம் அழைத்து சென்றனர்.

இதனை தொடர்ந்து, ஜார்க்கண்ட் சட்டமன்றம் கூட்டம் நாளை மறுநாள் கூட்டப்பட்டு அன்றைய தினம் சம்பாய் சோரன் பெரும்பான்மையை நிரூபிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏ.-க்களிடம் பா.ஜ.க. குதிரை பேரம் நடத்த முடியாத வகையில், அவர்கள் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் எம்.எல்.ஏ.க்கள் அறைகளுக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே உள்ளே சென்று அவர்களை பார்க்கும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்கள் பயன்படுத்துவதற்காக தனி லிப்ட் மற்றும் உணவு அருந்த தனி அறையை ஹோட்டலின் முதல் தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பாய் சோரன் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் அன்று ஜார்க்கண்ட் எம்.எல்.ஏ.க்கள் ராஞ்சிக்கு செல்வார்கள் என்று தெலுங்கானா காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபையில் சுமார் 43 மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ஜே.எம்.எம். தலைமையிலான கூட்டணி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com