

புதுடெல்லி,
டெல்லி கலவரத்தை எதிர்த்து, டெல்லியில் காங்கிரஸ் கட்சி நேற்று அமைதி பேரணி நடத்தியது. காங்கிரஸ் தலைமையகத்தில் பேரணி தொடங்கியது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கலந்து கொண்டார். மூத்த தலைவர்கள் முகுஸ் வாஸ்னிக், கே.சி.வேணுகோபால், பி.எல்.புனியா, ரந்தீப் சுர்ஜேவாலா, மணிசங்கர் அய்யர், சுஷ்மிதா தேவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காந்தி அருங்காட்சியகம்வரை பேரணியாக செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், அதற்கு முன்பே போலீசார் தடுத்து நிறுத்தினர். உடனே காங்கிரசாருடன் பிரியங்கா தரையில் அமர்ந்தார். தொண்டர்கள், காந்திக்கு பிடித்த ரகுபதி ராகவ ராஜாராம் பாடலை பாடத் தொடங்கினர்.
அவர்களிடையே பிரியங்கா பேசுகையில், டெல்லியில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு தவறி விட்டது. எனவே, அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு காங்கிரசார் சென்று அமைதிக்கு துணைநிற்க வேண்டும் என்றார்.