இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்கிறது: காங்கிரஸ்

தவிர்க்க முடியாத காரணங்களால் சில கட்சிகள் பங்கேற்கவில்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்கிறது: காங்கிரஸ்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் நாளை நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பதை உறுதி செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. டெல்லியில் நாளை மதியம் 12 மணிக்கு இந்தியா கூட்டணியின் ஆலோசனை நடக்கிறது.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

இந்தியா கூட்டணி

நாளை மதியம் 12 மணிக்கு, டெல்லி அரசியலமைப்பு மன்றத்தில் நடைபெறவுள்ள இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

இந்த சிறப்புக் கூட்டத்தில் ஒருசில காரணங்களுக்காக சில கட்சிகள் பங்கேற்கவில்லை. எனினும் மோடி அரசாங்கத்திற்கு எதிரான தங்கள் கொள்கைகளிலும் நடவடிக்கைகளிலும் அவர்கள் அழுத்தமாக ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

ஜனநாயகத்தின் மீது நாள்தோறும் தாக்குதல் நடத்துவது, விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சியினரை அச்சுறுத்துவது, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது, ஓயாத பணவீக்கத்தின் மூலம் நடுத்தரக் குடும்ப பட்ஜெட்டை சீர்குலைப்பது, லட்சக்கணக்கான இளைஞர்கள், தேர்வர்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைப்பது, முதலீட்டு சூழலை பலவீனமாக்குவது மற்றும் வெளியுறவுக் கொள்கையில் சமரசம் செய்துகொள்வது, நீட் தேர்வில் குளறுபடி, சிபிஎஸ்இ தேர்வில் முறைகேடு போன்றவற்றில் பாஜகவுக்கு எதிராக அவர்கள் நம்முடன் இணைந்து நிற்கின்றனர்.

திமுக புறக்கணிப்பு

இந்தியாவை போன்று இந்தியா கூட்டணியும் பன்முகத்தன்மையில் ஒன்றுபட்டு நிற்கிறது என அதில் தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணி கூட்டத்தில் ஆம் ஆத்மியும், திமுகவும் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com