மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரஜனி பாட்டீல் போட்டியின்றி தேர்வு

மாநிலங்களவை தேர்தலில் கடைசி நேரத்தில் பா.ஜனதா தனது வேட்பாளரை திரும்ப பெற்றதால், காங்கிரஸ் வேட்பாளர் ரஜனி பாட்டீல் போட்டியின்றி தேர்வானார்.
மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரஜனி பாட்டீல் போட்டியின்றி தேர்வு
Published on

இடைத்தேர்தல்

மராட்டியத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்து வந்த ராஜீவ் சதவ் சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இவரது பதவி காலம் 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இருந்தது.எனவே இந்த காலியிடத்துக்கு வருகிற 4-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் மகா விகாஷ் அகாடி கூட்டணிகள் சார்பில் காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் ரஜனி பாட்டீல் (வயது 62) வேட்பு மனு செய்தார். பா.ஜனதா சார்பில் சஞ்சய் உபாத்யாய் வேட்பு மனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் வேட்பாளருக்கு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவு இருப்பதால், இவர் எளிதில் வெற்றி பெற வாய்ப்பு உருவானது.

திடீர் வாபஸ்

இந்தநிலையில் மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே, அந்த கட்சியை சேர்ந்த மந்திரி பாலசாகேப் தோரட் ஆகியோர் சமீபத்தில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசை சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் வேட்பாளர் போட்டியின்றி தேர்வாக ஏதுவாக பா.ஜனதா வேட்பாளரை போட்டியில் இருந்து திரும்ப பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

வேட்பு மனுவை வாபஸ் பெற நேற்று கடைசி நாள் என்பதால், பா.ஜனதா வேட்பாளர் சஞ்சய் உபாத்யாய் கடைசி நேரத்தில் தனது வேட்பு மனுவை திரும்ப பெற்றார். இது குறித்து அவர் கூறுகையில், "எனது கட்சி தலைவர்கள் உத்தரவின் பேரில் வேட்பு மனுவை திரும்ப பெற்றுள்ளேன். இதனால் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது" என்றார்.

போட்டியின்றி தேர்வு

பா.ஜனதா வேட்பாளர் மனுவை திரும்ப பெற்றதால், காங்கிரஸ் வேட்பாளரை தவிர வேறு யாரும் போட்டியில் இல்லை. எனவே அந்த கட்சி வேட்பாளர் ரஜனி பாட்டீல் போட்டியின்றி தேர்வாகி உள்ளார்.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com