தொகுதி மறுவரையறை: ‘இந்திய தேர்தல் வரைபடத்தையே மாற்ற பாஜக முயற்சி’- ராகுல்காந்தி குற்றச்சாட்டு

தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறாது என மக்களவையில் ராகுல் காந்தி பேசினார்.
தொகுதி மறுவரையறை: ‘இந்திய தேர்தல் வரைபடத்தையே மாற்ற பாஜக முயற்சி’- ராகுல்காந்தி குற்றச்சாட்டு
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தற்போது நாடாளுமன்றத்தில் உள்ள 543 தொகுதிகளின் எண்ணிக்கையை 850ஆக உயர்த்துவதற்கான தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மக்களவை நேற்று (16ஆம் தேதி) கூடியது.

அதன்படி, தொகுதி மறுவரையறை தொடர்பான 3 மசோதாக்கள் நேற்று விவாதிக்கப்பட்டு, வாக்கு எடுப்பு நடத்தி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளான இன்றும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது.

இந்நிலையில் இன்று மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்த மசோதா குறித்து பேசியதாவது;

“பிரதமர் மோடி ஒரு வித்தைக்காரர் . மேஜிக் காட்டுவது போல 3 மசோதாக்களை ஒன்றின் மீது ஒன்றாக மறைத்து கொண்டு வந்துள்ளார். மசோதா நிறைவேறாது எனத் தெரிந்தும் பீதியில் இதனை கொண்டுவந்துள்ளனர். தொகுதி மறுவரையறை மசோதா மூலம், இந்தியாவின் தேர்தல் வரைபடத்தை மாற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது. இது வெட்கக்கேடானது. இதனை மகளிர் மசோதா என திசை திருப்புவதா? தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற அனுமதிக்க மாட்டோம்.

ஓ.பி.சி. மற்றும் பட்டியலினத்தவரை இந்துக்கள் என்கிறீர்கள். ஆனால், அவர்களுக்கு உரிமை தர மறுக்கிறீர்கள். இந்திய சமூகம் ஓ.பி.சி.களையும், தலித் மக்களையும் எப்படி நடத்தியது என அனைவருக்கும் தெரியும். ஜாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் மக்களவையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா 2023ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இது மகளிர் மசோதா கிடையாது. இது காஷ்மீர், அசாமைப் போல தேசிய அரசியல் வரைபடத்தை மாற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது. தொகுதி மறுவரையறை மசோதா தேசவிரோதமானது. இதுபோன்ற மசோதாக்களால் தேசம் தாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.”

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com