போராட்டக்காரர்களை குறிவைத்து டெல்லியில் தொடரும் துப்பாக்கி சூடு: பதற்றம் அதிகரிப்பு

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டக்காரர் களை குறிவைத்து துப்பாக்கியால் சூடும் சம்பவம் தொடருவதால் அங்கு பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.
போராட்டக்காரர்களை குறிவைத்து டெல்லியில் தொடரும் துப்பாக்கி சூடு: பதற்றம் அதிகரிப்பு
Published on

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலே போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், கடந்த மாதம் 30-ந்தேதி இந்த சட்டத்துக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய பேரணியின்போது, வாலிபர் ஒருவர் மாணவர்களை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் காயம் அடைந்தார். சம்பவத்தில் ஈடுபட்ட அந்த நபர், போலீசாரால் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் சிறைக்காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

இதேபோல், கடந்த 1-ந்தேதியும் டெல்லியின் ஷாகீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பெண்கள் நடத்தி வரும் போராட்டத்தின் இடையே ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்ததில், அவர் நொய்டா பகுதியை சேர்ந்த கபில் குஜ்ஜர் என்பது தெரியவந்தது. அவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில், டெல்லி ஜாமியா பல்கலைக்கழக வளாகம் முன்பு நேற்று முன்தினம் நள்ளிரவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. பல்கலைக்கழகத்தின் வாசலுக்கு வெளியே மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு அங்கிருந்து தப்பி சென்று உள்ளனர்.

துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பின் மாணவர்களும், பொதுமக்களும் ஜாமியா நகர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பல்கலைக்கழகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கடந்த 5 நாட்களில் 3 முறை நடந்த இந்த துப்பாக்கி சூடு சம்பவங்களால் தலைநகரில் போடப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள் கேள்விக்குள்ளாகி உள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறியதால் டெல்லி தென்கிழக்கு பகுதியின் துணை போலீஸ் கமிஷனர் சின்மாய் பிஸ்வால், அந்த பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளார். இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

அவருக்கு பதிலாக டெல்லி தென்கிழக்கு பகுதியின் கூடுதல் போலீஸ் துணை கமிஷனர் கியானேஷ், துணை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com