ஆர்.எஸ்.எஸ் பாடலை பாடியதால் எழுந்த சர்ச்சை: மன்னிப்பு கோரினார் டிகே சிவக்குமார்

சட்டப்பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலை பாடியதற்காக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரும் துணை முதல்வருமான டி.கே. சிவக்குமார் மன்னிப்புக் கோரியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் நடந்த கூட்டத்தொடரின்போது, ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் எதிர்க்கட்சியான பா.ஜ.க.வினரின் கேள்விக்கு பதிலளித்து பேசினார். அப்போது, நான் காங்கிரசில் வளர்ந்தவன். உங்களுக்கு எப்படி பதில் அளிக்க வேண்டும் என்று எனக்கு தெரியும் என்றார்.
அதற்கு, எதிர்க்கட்சி தலைவரான ஆர். அசோக், டி.கே. சிவக்குமாரிடம் நீங்கள் ஒரு முறை ஆர்.எஸ்.எஸ். சீருடை அணிந்திருந்தீர்கள் அல்லவா? என்றார். இதனை கேட்டதும் சிரித்த டி.கே. சிவக்குமார், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கீதம் எனப்படும் ‘நமஸ்தே சத வத்சலே மாத்ருபூமே....’என தொடங்கும் வரிகளை பாடினார். இதனால், எதிர்க்கட்சிகள் வரிசையில் சலசலப்பு ஏற்பட்டது. அவர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். ஆளும் காங்கிரஸ் கட்சியினரோ அமைதியாக இருந்தனர். டிகே சிவக்குமார் ஆர்.எஸ்.எஸ் பாடலை கர்நாடகாவில் அரசியல் ரீதியாக விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த டி.கே.சிவகுமார், ஆர்எஸ்எஸ் பாடல் சர்ச்சை மற்றும் தன் மீதான விமர்சனத்துக்கு விளக்கம் கொடுத்தார்.“சில தினங்களுக்கு முன்னர் பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலின் மூன்று வாக்கியத்தை நான் பாடி இருந்தேன். அதன் மூலம் ஐபிஎல் போட்டி தொடர்பான பிரச்சினை சார்ந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அசோகாவை பங்கேற்க செய்ய முயற்சித்தேன்.
ஏனெனில், எனது நண்பர்கள் சிலர் இதை வைத்து அரசியல் ஆதாயம் பெறவும், பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தவும் முயற்சிக்கின்றனர்.நான் காங்கிரஸ் கட்சிக்காரனாக பிறந்தேன். அப்படியே தான் உயிர் பிரிவேன். காந்தி குடும்பத்தை யாரேனும் கேள்வி கேட்பதை அனுமதிக்க முடியாது. எனது செயல் யாரையேனும் புண்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறேன். அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். ஆனால், இதை அரசியல் அழுத்தம் காரணமாக செய்யவில்லை. எனது கட்சியின் சகாக்கள் சிலர் இது தொடர்பாக வெளிப்படுத்திய கருத்தினை நான் விரும்பவில்லை” என்றுகூறியுள்ளார்.






