வயநாடு தொகுதி குறித்து சர்ச்சை கருத்து: மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்

வயநாடு தொகுதி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
வயநாடு தொகுதி குறித்து சர்ச்சை கருத்து: மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தென்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் விருப்பத்திற்கேற்ப கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என கடந்த 31-ந்தேதி அக்கட்சி மேலிடம் அறிவித்தது.

ராகுல்காந்தி அமேதி தொகுதியில் தோற்று விடுவோம் என பயந்துதான் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுவதாக பா.ஜனதா தலைவர்கள் கேலி செய்தனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் வர்தாவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அமைதியை விரும்பும் இந்து மக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தியவர்கள் தான் காங்கிரசார். அதனால் தான் பெரும்பான்மை சமுதாயத்தினர் அதிகமாக வசிக்கும் தொகுதிகளில் நிற்பதற்கு தயங்கி, சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதியில் போட்டியிடுகிறார்கள் என ராகுல்காந்தியை தாக்கி பேசினார்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி அக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:-

ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை பிரதமர் மோடி இழிவுபடுத்தி பேசி உள்ளார். தேர்தலில் தோற்று விடுவோம் என்ற படபடப்பில் மோடி பேசி உள்ளார்.

பல்வேறு மொழி, கலாசாரம், மதம் கொண்ட தேசத்தை பிரதமர் அவமானப்படுத்தி உள்ளார்.

சுதந்திர போராட்டத்தையும், தென் இந்திய மக்களையும் பிரதமர் மோடி களங்கப்படுத்தி உள்ளார். எனவே பிரதமர் மோடி தனது பேச்சுக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தேர்தல் ஆணையம் இதனை கருத்தில் கொண்டு மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தி நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

இன்று (புதன்கிழமை) மாலை கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு வருகை தர உள்ள அவர் நாளை அங்கு வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com