

புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்பு குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் இன்று காலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், கவர்னர் அனில் பைசால், எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குளேரியா மற்றும் மாநில பேரிடர் மீட்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நோய் பாதிப்பு, நோயை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், அடுத்த 2 நாட்களில் டெல்லியில் கொரோனா பரிசோதனை 2 மடங்காகவும், அடுத்த 6 நாட்களில் 3 மடங்காகவும் அதிகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் குறைவாக இருப்பதால், மத்திய அரசு சார்பாக படுக்கை வசதிகள் கொண்ட 500 ரெயில் பெட்டிகளை வழங்க இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதன் மூலமாக மேலும் 8000 நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.