டெல்லியில் டாக்டருக்கு கொரோனா பாதிப்பு: சிகிச்சை பெற்ற நோயாளிகளை தனிமைப்படுத்த அறிவுறுத்தல்

டெல்லியில் டாக்டருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகளை தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
டெல்லியில் டாக்டருக்கு கொரோனா பாதிப்பு: சிகிச்சை பெற்ற நோயாளிகளை தனிமைப்படுத்த அறிவுறுத்தல்
Published on

புதுடெல்லி,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லியில் 35-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் முக்கியமாக வடகிழக்கு டெல்லியில் உள்ள மஜ்பூரில் இயங்கி வரும் மொஹல்லா கிளனிக் ஒன்றின் (டெல்லி அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட சமூக சுகாதார மையம்) டாக்டர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட டாக்டருக்கு வெளிநாட்டு பயணியுடன் தொடர்பு இருந்ததா? அல்லது இவர் வெளிநாட்டுக்கு சென்றபோது கொரோனா தொற்று ஏற்பட்டதா? என்பது குறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே அந்த டாக்டருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவதற்கு முன்பாக ஏராளமான நோயாளிகள் அவரை சந்தித்து சிகிச்சை பெற்று சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்த அரசு அறிவுறுத்தி உள்ளது.

அதன்படி அந்த சுகாதார மையத்துக்கு சென்று டாக்டரை சந்தித்த நோயாளிகளை கண்டறிந்த சுகாதாரத்துறையினர், அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் அந்த நோயாளிகள் அனைவரும் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், சளி, காய்ச்சல் இருந்தால் உடனே தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

டாக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவரிடம் சிகிச்சை பெற்றவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com