மும்பை மாநகராட்சி தேர்தல்: 29 மாநகராட்சிகளையும் கைப்பற்ற போவது யார்? வாக்கு எண்ணிக்கை தொடங்கியது


மும்பை மாநகராட்சி தேர்தல்:  29 மாநகராட்சிகளையும் கைப்பற்ற போவது யார்? வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
x

மராட்டியத்தில் 29 மாநகராட்சிகளுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. சராசரியாக 50 சதவீத வாக்குகள் பதிவாகின.

மும்பை,

மராட்டியத்தில் மும்பை, தானே, புனே, நாக்பூா், நவிமும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகள் உள்ளன. இந்த மாநகராட்சிகளின் பதவி காலம் முடிந்த பிறகும் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து, மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலை ஜனவரிக்குள் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து கடந்த மாதம் 15-ந் தேதி மாநிலத்தில் உள்ள 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் அறிவிப்பை அடுத்து மாநில அரசியல் களம் சூடுபிடித்தது. மாநிலம் முழுவதும் அனைத்து கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.

இந்த தேர்தலில் 2 ஆயிரத்து 869 கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க 15 ஆயிரத்து 391 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். மும்பையில் மட்டும் 1,700 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அனைத்து மாநகராட்சிகளிலும் 3 கோடியே 48 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று 29 மாநகராட்சிகளுக்கான வாக்குப்பதிவு நடந்தது. தேர்தலையொட்டி வாக்குப்பதிவுக்கு மாநில தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்து இருந்தது. இது நகர்ப்புற தேர்தல் என்பதால், தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள் வாக்களிக்க படையெடுத்தனர். 29 மாநகராட்சிகளிலும் நடந்த வாக்குப்பதிவு மாலை 5.30 மணியுடன் முடிந்தது. 5.30 மணிக்கு வாக்குப்பதிவு மையத்தில் இருந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு வந்தவர்களை அதிகாரிகள் வாக்களிக்க அனுமதிக்கவில்லை.

வாக்குப்பதிவு நிறைவில் மும்பை உள்பட அனைத்து மாநகராட்சிகளிலும் சராசரியாக 50 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டன.

இந்நிலையில் அனைத்து மாநகராட்சிகளிலும் பதிவான வாக்குகள் இன்று (வெள்ளிக்கிழமை) எண்ணப்பட்டு வருகிறது. காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மும்பையில் மட்டும் 23 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

மதியம் 1 மணி அளவில் வெளியாகும் வெற்றி நிலவரத்தை வைத்து 29 மாநகராட்சிகளையும் கைப்பற்ற போவது யார்? என்பதை ஓரளவு கணிக்க முடியும். மாலை வேளையில் முழுமையான முடிவுகள் தெரிந்து விடும்.

1 More update

Next Story