

மும்பை,
மராட்டிய மாநிலம் லாத்தூர் மாவட்டம், தேவ்னி தாலுகாவைச்சேர்ந்த விவசாயி காசிநாத் கெய்க்வாட். இவரது மனைவி அவசாபாய். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின்போது. இவர்களது காளை மாடு மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. தங்களின் வாழ்வாதாரமாக இருந்த காளை இறந்ததால் இந்த தம்பதி நிலைகுலைந்து போயினர்.
மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் நிலத்தை உழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், புதிதாக காளை மாடு ஜோடியை வாங்குவதற்கு இந்த ஏழை விவசாய தம்பதியிடம் போதிய பணம் இல்லை. இதன்காரணமாக, வேறு வழியின்றி தம்பதியினர் இருவரும் தங்களது நிலத்தை உழுவதற்கு தாங்களே மாடுகளாக மாறினர்.
ஏர்க்கலப்பையில் ஒரு காளையுடன், மறுபுறம் விவசாயி காசிநாத் கெய்க்வாட் தனது தோளில் பூட்டி உழுதார். அவர் களைப்படைந்த பின்னர் அவரது மனைவி அவசாபாய் ஏர்கலப்பையை தோளில் பூட்டிக் கொண்டார். இந்த நெஞ்சை உருக்கும் வீடியோ சமூகவலைத் தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை சுட்டிக்காட்டி தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) கட்சி எம்.எல்.ஏ. ரோகித் பவார் விடுத்துள்ள பதிவில், “இந்த அவல நிலையை கண்டு அரசு உடனடியாக அந்த விவசாய தம்பதிக்கு நிதியுதவி வழங்க வேண்டும். விவசாயிகளின் துயரத்தை துடைக்க நிபந்தனையற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டியது அவசியம்” என்று வலியுறுத்தியுள்ளார்.