

கொழும்பு,
சீனாவில் தோன்றிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இத்தாலி, ஈரான், அமெரிக்கா, பிரான்ஸ் என பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வைரஸ் தொற்றால் செத்து மடிந்துள்ளனர். இந்த மரணத்தொகை நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது.
இதனால் உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக வைரஸ் அறிகுறி கொண்டவர்களை தனிமைப்படுத்துதல், அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தடை, பயணக்கட்டுப்பாடுகள் என ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இந்தநிலையில் தீவு நாடான இலங்கையில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் நாடு முழுவதும் 230 பேர் வைரஸ் அறிகுறிகளுடன் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். இதனால் இலங்கை அரசும் தீவிர கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
இதில் முக்கியமாக வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று மாலை 6 முதல் 23-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இந்த நாட்களில் மக்கள் அனைவரும் வீடுகளிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த உத்தரவை அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று பிறப்பித்தார்.
முன்னதாக வெளியே மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் நாடு முழுவதும் மக்கள் 7 நாட்களுக்கு வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் திட்டத்தை நேற்றுமுன்தினம் கோத்தபய ராஜபக்சே அறிவித்து இருந்தார்.
இந்த திட்டமும் நேற்று முதல் வருகிற 27-ந்தேதி வரை அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.